சொந்த வீட்டிலேயே ரூ.2 லட்சம், ஒரு சவரன் செயினை திருடி காதலனுக்கு பைக் வாங்கி கொடுத்து குஷிப்படுத்த முயன்ற பள்ளி மாணவி: போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

சென்னை: காதலனுக்கு ‘பைக்’ பரிசாக வழங்க வேண்டும் என்று, வீட்டில் பெற்றோருக்கு தெரியாமல் ரூ.2 லட்சம் பணம், ஒரு சவரன் செயினை பிளஸ்-2 மாணவி ஒருவர் திருடியுள்ளார். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராணி(43)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அசோக் நகர் காவல் நிலையத்தில் கல்லூரி மாணவன் ஒருவர் மீது பரபரப்பு புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரின் படி நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: ராணியின் 17 வயதில் மகள் அருகில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். மாணவியின் பாட்டி வீடும் அதே பகுதியில் உள்ளது. இதனால் பள்ளி முடிந்த உடன், மாணவி தனது பாட்டி வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்படி சென்று வரும்போது, கல்லூரி மாணவர் ஒருவர் மாணவிக்கு அறிமுகமாகியுள்ளார். நண்பர்களாக பழகிய இருவரும் பிறகு காதலர்களாக மாறியுள்ளனர். அப்போது கல்லூரி மாணவன், என்னிடம் பைக் இருந்தால் இப்படி பஸ்சில் போகாமல் ஜாலியாக, வீட்டிற்கு தெரியாமல் பீச், பார்க் சென்று சுற்றலாம் என்று கூறியுள்ளார். அதற்கு பள்ளி மாணவி பைக் வாங்க எவ்வளவு அகும் என்று கேட்டுள்ளார். அதற்கு கல்லூரி மாணவன் ரூ.2.50 லட்சம் ஆகும் என்று கூறியுள்ளார். உடனே மாணவி பணத்தை நான் தருகிறேன் யாருக்கும் தெரியாமல் பைக் வாங்கிவிடு, நாம் அதில் சுற்றலாம் என்று கூறியுள்ளார். பிறகு மாணவி சில நாட்களுக்கு முன்பு வீட்டின் பீரோவில் வைத்திருந்த ரூ.2 லட்சம் ரொக்க பணத்தை பெற்றோருக்கு தெரியாமல் திருடி தனது காதலனிடம் கொடுத்துள்ளார். அப்போது அவரது காதலன் ரூ.2 லட்சத்தில் நல்ல பைக் வாங்க முடியாது இன்னும் ரூ.50 ஆயிரம் தேவைப்படும் என்று கூறியுள்ளார். உடனே மாணவி வீட்டில் என்னுடையே ஒரு சவரன் செயின் இருக்கிறது அதை கொண்டு வந்து கொடுத்தால் சரியாக இருக்குமா என்று கேட்டுள்ளார். அதற்கு அவளது காதலன் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளான். பிறகு மறுநாள் ஒரு சவரன் செயினை தனது காதலனிடம் கொண்டு வந்து கொடுத்து விலை உயர்ந்த பைக் வாங்க சொல்லியுள்ளார். இதற்கிடையே வீட்டில் இருந்து பணம் மற்றும் நகை எடுத்தது குறித்து பெற்றோருக்கு சந்தேகம் வராததால் பள்ளி மாணவி  குறித்து வீட்டில் வைத்த ரூ.2 லட்சம் பணம் மற்றும் ஒரு சவரன் செயின் மாயமானது குறித்து மாணவியின் தந்தை அவரது மனைவியிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். வீட்டில் பூட்டு உடைக்கப்படவில்லை. வெளியாட்கள் யாரும் இல்லாத நிலையில் எப்படி பீரோவில் வைத்திருந்த பணம் மற்றும் நகை மட்டும் மாயமாகும். வெளியாட்கள் எடுத்து இருந்தால் நகைகள் அனைத்தையும் திருடி இருப்பார்களே. நகையில் ஒரு சவரன் மட்டும் எப்படி மாயமாகும் என்று குழப்பத்தில் இருந்து வந்துள்ளனர். வீட்டில் பெற்றோர் பணம் மற்றும் நகை மாயமானது குறித்து சண்டை போடுவதாக தனது காதலனிடம் மாணவி தெரிவித்துள்ளார். அதற்கு எதையும் தெரியாதபடி இருக்குமாறு மாணவியிடம் காதலன் கூறியுள்ளான். ஒரு கட்டத்தில் மாணவியின் தாய்க்கு தனது மகள் மீது சந்தேகம் வந்தது. அடிக்கடி செல்போனை எடுத்து கொண்டு தனியாக பேசி வந்ததை அறிந்து, மகளை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது தான் பணம் மற்றும் நகையை காதலனுக்கு பைக் பரிசாக வழங்க யாருக்கும் தெரியாமல் எடுத்தது தெரியவந்தது. உடனே மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் எனது மகளுக்கு அசை வார்த்தை கூறி பணம் பறித்து அதன் மூலம் சொகுசு வாழ்க்கை வாழ ரூ.2 லட்சம் பணம், ஒரு சவரன் நகையை பறித்த கல்லூரி மாணவன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். அதன்படி சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு 17 வயது என்பதால் விசாரணை ரகசியமாக நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்….

Related posts

சொகுசு கார் மோசடி: தவெக நிர்வாகி கைது

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது