சொந்த வீடு வாங்க வேண்டாம் என மனைவி கூறியதால் உடலில் மின்சாரம் பாய்ச்சி கணவன் தற்கொலை: போலீசார் விசாரணை

அம்பத்தூர்: வீடு வாங்க வேண்டாம், மகள்களை நன்றாக படிக்க வைக்க வேண்டும், என மனைவி கூறியதால், தான் ஆசைப்பட்டது நிறைவேறவில்லை என்ற மனஉளைச்சலில் இருந்த கணவன் தனது உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியது. அம்பத்தூர், ராம்நகர் அருகே பத்மாவதி சீனிவாசன் நகரை சேர்ந்தவர் குமரகுரு (55). வங்கதேசத்தில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் மேனேஜராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி லலிதா (48). இவரது மகள் சஞ்சனா (18), தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 2வது மகள் அவந்திகா (14), தனியார் பள்ளியில் படித்து வருகிறார். வேலை செய்து சேமித்த பணத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன், சென்னைக்கு திரும்பிய குமரகுரு, தான் சம்பாதித்த பணத்தில் அம்பத்தூரில் சொந்த வீடு வாங்க ஆசைப்பட்டார். இதுகுறித்து தனது மனைவியிடம், ‘நம்மிடம் உள்ள நகைளை விற்றும், வெளிநாட்டில் சம்பாதித்த பணம் மற்றும் நகையை விற்றும், புது வீடு மற்றும் கார் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழலாம்’ என கூறியுள்ளார். இதற்கு அவரது மனைவி லலிதா, சொந்த வீடெல்லாம் வேண்டாம். 2 மகள்களையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும், என பதில் கூறியுள்ளார். இதில் குமரகுரு, தான் ஆசைப்பட்டது நிறைவேறவில்லை என மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தூங்க சென்ற குமரகுரு, நேற்று காலை 8 மணிக்கு மேலாகியும் அறையைவிட்டு வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த மனைவி லலிதாவும் அவர்களது  இரு மகள்களும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தனர். அங்கு குமரகுரு உடலில் காப்பர் வயரை சுற்றிக்கொண்டு, அதை மின் இணைப்பில் பொருத்தி தற்கொலை செய்திருப்பதை கண்டு  அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த அம்பத்தூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, மின் இணைப்பை துண்டித்து, குமரகுரு சடலத்தை கைப்பற்றி  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என  விசாரித்து வருகின்றனர்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்