சொந்த எஸ்டேட்டுக்காக பாசன திட்டத்தை நிறுத்திய இலையின் முன்னாள் அமைச்சர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மேடை நாடகம் பார்த்து இருக்கிறோம்… குட்கா நாடகம் பார்த்து இருக்கீங்களா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘பெங்களுரூவில் இருந்து குட்கா தமிழகத்திற்குள் கடத்தி வரப்படுகிறது. இப்படி வரும் குட்கா பொருட்களை வேலூர் மாவட்டத்தில் உள்ள குடோன்களில்தான் பதுக்கி வைக்கிறார்களாம். பின்னர் அவை வேலூர், சென்னை, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு கடத்தி செல்லப்படுகிறதாம். குறிப்பாக, வேலூர் மாவட்டத்திற்குள் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் வாகனங்கள் மூலம் கடத்தப்பட்டு, சில்லறையிலும், மொத்த விற்பனை கடைகளுக்கும் நேரடியாக டெலிவரி செய்யப்படுகிறதாம். இதற்கு காக்கி முதல், வருவாய் துறை, உணவு, மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதாம். இதனால் பெரிய அளவில் நடக்கும் குட்கா, புகையிலை கடத்தலை தடுக்காமல், அடிக்கடி சிறு, சிறு அளவிலான குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி செல்பவர்களை கணக்கிற்காக கைது செய்து சிறையில் அடைக்கும் நாடகம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு மட்டும் குட்கா, புகையிலை விற்பனை செய்ததாக 416 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 13 டன் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், குட்கா சோதனையை தீவிரப்படுத்தியிருந்தால் மேலும் பல டன் கணக்கில் குட்கா பொருட்கள் சிக்கி இருக்கும் என காவலர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. காரணம், சென்னைக்கு கடத்தி வரப்படும் முக்கிய வழித்தடமாக வேலூர்தான் உள்ளதாம்… ஆனால் நினைத்தால் ரெய்டு… இல்லாவிட்டால் ரெஸ்ட் என்ற ரீதியில் அதிகாரிகளின் நடவடிக்கைகள் நாடகமாக இருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘சொந்த லாபத்துக்காக நூற்றுக்கணக்கான விவசாயிகளின் வாழ்க்கையோடு விளையாடும் இலை கட்சியின் முன்னாள் அமைச்சரை பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘அதியமான் கோட்டை மாவட்டத்தில் விவசாயிகள் நலன்சார்ந்த சில, நீர் பயன்பாட்டு திட்டங்கள் அறிவிப்போடு அந்தரத்தில் தொங்குது. இதில் அதியமான்கோட்டை மாவட்டத்தையும், அருகிலுள்ள கிரி மாவட்டத்தையும் இணைக்கும் நீர் பயன்பாட்டு திட்டம் அதிவிரைவில் நிறைவேற்றப்படும் என்று தமிழக விவிஐபியும், உள்ளூர் அமைச்சரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் வாக்குறுதி கொடுத்தாங்களாம். ஆனால் இந்த வாக்குறுதி 4 வருஷமாகியும் நிறைவேறலையாம். இதற்கு இரு மாவட்டங்களையும் சேர்ந்த இலை கட்சி நிர்வாகிகளும், வேளாண் சங்கங்களும் சொல்லும் காரணம் அதிர வைக்குதாம். அதாவது கிரி மாவட்டத்தில் இலைகட்சி மூத்த பிரமுகராக இருப்பவர் இந்நாள் எம்பியான முன்னாள் அமைச்சர். அவருக்கு சொந்தமான பெரிய எஸ்டேட் ஒண்ணு இருக்காம். விவசாயிகளுக்காக விவிஐபியும், உள்ளூர் அமைச்சரும் உறுதியளித்த நீர் பயன்பாட்டு திட்டத்தை செயல்படுத்தினால் எஸ்டேட்டுக்கு வேண்டிய தண்ணீர் வராதாம். இதனால் அந்த பிரமுகர், இந்த திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்பதில் கவனமா இருக்கிறாராம். தேனி காரரை மவுனயுத்தம் நடத்த வச்சவராச்சே, அவருக்கு விருப்பமில்லாத திட்டத்தை நிறைவேத்திட முடியுமா என்று வெள்ளந்தியாக கேட்கிறார்களாம் சில உயரதிகாரிகள்… என்ன இருந்தாலும் விவசாயிகளின் நலனை புறக்கணித்துவிட்டு சொந்த நலனுக்காக ஒரு திட்டத்தை முடக்குவது சரியில்லை என்று இலை கட்சியினரே வேதனை படறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஒவ்வொருத்தருக்கும் ஒரு கவலை… மலைக்கோட்டை காக்கிகளின் கவலையைப்பற்றி சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டது. பொங்கல் முடிந்து ஒரு வாரமாகியும் இதுவரை பொங்கல் போனஸ் வழங்கவில்லை என மலைக்கோட்டை மாநகர காக்கிகள் குமுறுகின்றார்களாம்… போனஸ் குறித்து கேட்டால் நெட்வொர்க் ஸ்லோ என காரணம் கூறுகின்றனர். நெட்வொர்க் ஸ்லோவால் போனஸ் தான் லேட். ஆனால் டிஏ உள்ளிட்ட படிகளும் கடந்த 3 மாதமாக வழங்கவில்லை என குமுறும் காக்கிகள் இந்த மாதத்திற்குள் போனஸ், டிஏ கிடைத்து விடுமா என கவலையுடன் மலைக்கோட்டை மாநர காக்கிகள் கேள்வி எழுப்புகின்றனர்… பிரச்னையை தீர்க்க வேண்டியது உயர் காக்கி தானாம்… அவர் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்கள் காக்கிகள்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘பட்ட காலிலேயே படும்னு சொல்றாங்களே…அது குமரி வியாபாரிகளுக்கு பொருந்தும்போல…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடற்கரை பகுதியில் உள்ள கடைகளில் கடந்த 9ம் தேதி நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 63 கடைகள் எரிந்து சாம்பலானது. ரூ.2 கோடிக்கும் மேலான பொருட்கள் சேதம் அடைந்தன. தீயில் சேதமான கடைகளில் ஒரு சில கடைகள் தவிர ஏனைய கடைகள் எல்லாம் அரசியல் பெரும் புள்ளிகள் பினாமி பெயர்களில் எடுத்து, அதை சாதாரண வியாபாரிகளுக்கு வாடகைக்கு கொடுத்து இருக்காங்களாம். இப்போது சேதம் அடைந்த கடைகளையும் அவர்கள் தான் கட்டி புனரமைத்து வர்றாங்க. இந்நிலையில் அறநிலையத்துறை மற்றும் ஆளுங்கட்சியின் பெயரை கூறி ஒவ்வொரு வியாபாரிகளிடமும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை தந்தால்தான் கடை கட்ட முடியும் என கூறி வசூலில் ஒரு தரப்பு இறங்கி இருக்காம். ஏற்கனவே தீ விபத்தால் நொந்து போய் உள்ள வியாபாரிகளிடம் திடீரென நடத்தப்படும் வசூல் வேட்டையால் வேதனையில் தவிக்கிறார்கள். தீ விபத்தை பயன்படுத்தி இப்படி காசு பார்த்து என்ன செய்யப்போகிறார்கள் என புலம்பி வருகிறார்கள் வியாபாரிகள்…’’ என்றார் விக்கியானந்தா.    …

Related posts

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கரன்சி இல்லாமலும் கூட்டணி ஆதரவு இல்லாமலும் கலங்கிக் கிடக்கும் வேட்பாளரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கட்சி கண்டுகொள்ளாததால் அதிருப்தி கோஷ்டியிடம் ஐக்கியமான இலை பிரமுகரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா