சொத்து அபகரிப்பு, பட்டா மாற்றம் பிரச்னையால் முதியவர், பெண் தீக்குளிக்க முயற்சி-குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தின்போது, முதியவர் மற்றும் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், டிஆர்ஓ பிரியதர்ஷினி, ஆர்டிஓ வெற்றிவேல் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 487 பேர் மனு அளித்தனர். அதன்மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், கடந்த வாரங்களில் பெற்ற மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்தும் ஆய்வு நடத்தினார்.இந்நிலையில், கலசபாக்கம் தாலுகா, சின்னகாலூர் கிராமத்தை சேர்ந்த முதியவர் ராமச்சந்திரன்(70) என்பவர், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு திடீரென மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அங்கு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். அவரிடம் நடத்திய விசாரணையில், தனது மகன் பாலசுப்பிரமணி என்பவர், உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு, 3 ஏக்கர் நிலத்தையும், வீட்டையும் அபகரித்து கொண்டு விரட்டிவிட்டதாகவும், போளூரில் தற்போது வசதித்து வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார். அந்த நிலத்தையும், வீட்டையும் மீட்டு தருமாறு கோரினார்.மேலும், செங்கம் தாலுகா, பெரியகாயம்பட்டு சின்னத்தோப்பு கிராமத்தை சேர்ந்த இந்திராணி(40) என்பவர், கலெக்டர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரையும், போலீசார் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். அவரிடம் நடத்திய விசாரணையில், கணவரை இழந்து மகளுடன் வசித்து வருதாகவும், கணவரின் பூர்வீக நிலத்தின் ஆவணங்கள், வருவாய் துறை பதிவேடுகளில் தவறாக பதிவாகியிருப்பதாகவும், அதை திருத்தம் செய்யக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார்.அடுத்தடுத்து முதியவர் மற்றும் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், இருவரையும் போலீசார் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து, பின்னர் விடுவித்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது….

Related posts

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய முதல்வருக்கு உமாகுமரன் நன்றி