சேலம்காரர் பதவிக்கு வந்து தங்களுக்கு இடைஞ்சல் தருவாரா என டெல்டா இலை கட்சியினர் கலக்கத்தில் இருப்பதை சொல்கிறார் wiki யானந்தா

‘‘இடைக்கால பொதுச் செயலாளராக சேலம்காரர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை எதிர்த்தவர்களின் நிலை என்ன…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ இலை கட்சியில் சேலத்துக்காரர் மற்றும் தேனிக்காரர் ஆகியோர் இடையே உச்சக்கட்ட மோதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இனி, எதிர்தரப்பினர் கட்சியில் இருந்து நீக்கம், கோர்ட் வழக்குகள், தேர்தல் ஆணையம் என்று இரு தலைவர்களின் அதிகார மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால், தேனிக்காரரை பதவி நீக்கம் செய்து அதிரடித்தார் சேலம்காரர். இதனால, தேனிக்காரரின் பின்னால் சென்ற தலைவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தான் கலக்கத்தில் இருக்காங்க. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பெரம்பலூர்  வைத்தியானவரின் ஆதரவாளர்களான மாவட்ட செயலாளர், முக்கிய நிர்வாகிகள் கலக்கத்தில் இருக்காங்களாம். வைத்திய நம்பி வந்ததற்கு நமக்கும் டிஸ்மிஸ்தான் பரிசாக கிடைக்கும்போல.. பேசாம சேலம் பக்கம் போயிருந்தால் கரன்சியோடு பதவியும் தக்க வைத்து இருக்கலாம். வைத்திக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண ஆட்களான நமக்கு என்ன நடக்குமோ என்ற கலக்கத்தில் டெல்டா மாவட்டம் முழுவதும் உள்ள இலை கட்சியின் மாவட்ட செயலாளர்களான மாஜி அமைச்சர்கள், மாஜி எம்எல்ஏக்கள் கடும் பீதியில் இருந்து வருவதுதான் ஒரே பேச்சாக இருக்காம்…ஆனா அதிமுக தனக்குத்தான் சொந்தம் என ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றால் 2 பேருக்கும் கிடைக்காமல் போகும் என்று பன்னீரின் ஆதரவாளர்கள் சொல்றாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான் என்பது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, ஒரு அதிகாரிக்கு மட்டும் கனகச்சிதமாக பொருந்தும் போல…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிநுட்ப ஊழியர்கள் 10 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்க்கிறார்கள். இப்போது விற்கும் விலைக்கு இந்த சம்பளம் போதவே போதாது என்பது சாதாரண மனிதனுக்கும் தெரியும். எனினும் எப்படியும் பணி நிரந்தரம் அல்லது ஊதிய உயர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பணியில் இருக்காங்க. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசு தினக்கூலியாக ₹859 வழங்கினாலும், ஒப்பந்தம் எடுத்த நபர், வெறும் ₹300 மட்டுமே கொடுக்கிறாராம். இதேபோல், கணினி இயக்கும் ஒப்பந்த பணியாளர்களுக்கு ₹333 மட்டுமே கிடைக்குதாம். கிட்டத்தட்ட பாதிக்கு பாதி கூலியில் கைவைக்கிறாங்க ஒப்பந்ததாரர்கள். இவர்களில், இலைக்கட்சியை சேர்ந்த பொறியாளர் தான் மாஸ்டர் மைண்டாக இருந்து ஸ்கெட்ச் போட்டு கொடுக்கிறாராம். இவர், இலைக்கட்சி ஆட்சியின்போது ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கும் டெண்டர் எடுத்துள்ளார். அந்த ஒப்பந்தம் இன்னும் அப்படியே நீடிக்கிறது. இவரது வீட்டில்தான் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தினர். தற்போது வருமான வரித்துறையினர் ரெய்டு நடந்துள்ளது. இந்த ரெய்டின்போது, மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களின் தினக்கூலி கமிஷன் பட்டியலையும் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 10 ஆண்டு காலத்தில் ஒப்பந்த பணியாளர்களுக்கு அரசு வழங்கிய சம்பளத்தில், இவர் எவ்வளவு கமிஷன் பெற்றுள்ளார் என்ற விவரம் அந்த பட்டியலில் உள்ளது… வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கு மட்டுமில்லாமல், அரசு பதவியில் ஊழல் செய்த விவகாரமும் பதிவாகி இருக்காம். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது, ேமாசடி வழக்குகள் என்று ஒன்றுக்கு பல வழக்குகள் அணி வகுத்து வருவதை பார்த்து, சம்பந்தப்பட்ட நபர் மிரண்டு போய் இருக்கிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ தாமரை நிர்வாகி எதற்காக கொந்தளித்து போனாராம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி தாமரை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தை நடத்தினாங்க. இதற்காக காசு கொடுத்தாவது நாம் மாஸ் காட்ட வேண்டும் என சென்னையில் இருந்து வந்த உத்தரவால் மாவட்ட தலைவர்கள் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள சொந்த காசு போட்டு ஆட்களை அழைத்து வந்தார்களாம். அப்படித்தான் புரம் என்று முடியும் மாவட்டத்தில் மாவட்ட தலைவரான இறால் பண்ணை அதிபர் அனைத்து ஒன்றியங்களுக்கும் காசு கொடுத்து ஆட்களை அழைத்து வர சொன்னாராம். பத்தாத பங்கிற்கு தாம் நடத்தும் பண்ணையில் வேலை செய்யும் வேலையாட்களையும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வேனில் அழைத்து வந்தாராம். ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள் ஒரு மணி நேரம் கூட தாக்கு பிடிக்காமல் கிளம்பி விட்டார்களாம். கூட்டத்தோடு வந்த நிர்வாகிகளும் தலையை காண்பித்துவிட்டு போயிட்டாங்க. இதனால் ஆர்ப்பாட்ட திடல் வெறிச்சோடி காணப்பட்டதாம். இதனால் ஆத்திரம் அடைந்த மாவட்ட தலைவரோ ஆர்ப்பாட்டம் முடியும் வரை கூட்டத்தை ஏன் நிற்க வைக்கவில்லை என்று நிர்வாகிகளிடம் ஆதங்கத்தை கொட்டினாராம்… கதறினாராம்.. அதற்கு தாமரை நிர்வாகிகள், உங்க பண்ணையில் இருந்து வந்தவர்கள் பாதியில் பஸ் பிடிச்சு கிளம்பிட்டாங்க என்று பதிலடி கொடுத்தாங்க. அப்புறம் கரன்சி மதிப்பும் குறைவாக இருந்ததால கூட்டத்துக்கு வந்தவங்களும் கொடுத்த காசுக்கு எல்லாம் சரியா போச்சுனு சொல்லி கிளம்பிட்டாங்க.. நாங்க என்ன செய்ய முடியும்னு கேட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா….

Related posts

மலராத கட்சி ஒருங்கிணைப்பாளர் நொந்து போய் கிடப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

குறி சொல்லும் சாக்கில் மக்களிடம் கட்டாய வசூல் நடத்தும் ஆன்மிக அரசியல்வாதி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

ஓட்டல் சர்ச்சையால் நன்கொடை பெற முடியாதே என்ற கவலையில் இருக்கும் பெண் எம்எல்ஏ பற்றி சொல்கிறார் wiki யானந்தா