சேலத்தில் 500 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்தார்: மேலும் 500 படுக்கை வசதி செய்ய உத்தரவு

சேலம்: தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக சென்னையில் இருந்து தனி விமானத்தில் நேற்று காலை  9.05 மணிக்கு சேலம் காமலாபுரம் வந்தார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தனி செயலாளர்கள் உதயசந்திரன், உமாநாத் ஆகியோரும் வந்தனர்.அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, வெள்ளக்கோவில் சாமிநாதன், கலெக்டர் கார்மேகம்,  எம்பிக்கள் கவுதமசிகாமணி, பார்த்திபன், நாமக்கல் சின்ராஜ், அந்தியூர்  செல்வராஜ், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அங்கு அதிகாரிகளுக்கு  ஆலோசனை வழங்கிய முதல்வர், பின்னர் சேலம் இரும்பாலைக்கு புறப்பட்டார். இரும்பாலை வளாகத்தில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டகொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அங்கு பணியில் இருந்த  டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோரிடம் முதல்வர்  பேசினார். இந்த சிகிச்சை மையம் அமைக்க உதவி செய்த தொழிலதிபர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர், சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மேலும் அங்கு 500 படுக்கை வசதி ஏற்படுத்தவும் உத்தரவிட்டார்.  இன்னும் 10நாட்களுக்குள் இதை செயல்படுத்த வேண்டும். அதோடு இந்தியாவிலேயே முதன்மையான சிறப்பு சிகிச்சை மையமாக மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.  பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருப்பூர் புறப்பட்டு சென்றார்.  வழியில் மகுடஞ்சாவடியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த டாக்டர்களிடம் சிகிச்சை குறித்தும், மருத்துவமனை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.மூதாட்டிக்கு உதவிய பெண்ணுக்கு பரிசுசேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த 70 வயது மூதாட்டி சுசீலா உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரது மகன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு டூவீலரில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். வரும் வழியில் சுசீலா மயங்கி விழுந்தார். அவரை  தூக்கி மீண்டும் டூவீலரில் அமர வைக்க மகன் போராடினார். அங்கிருந்த யாரும் அவருக்கு உதவி செய்ய வரவில்லை. 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக டூவீலரில் வந்த  காட்டூரைச் சேர்ந்த இளையராணி (21) என்ற இளம்பெண், வண்டியை நிறுத்தி, சுசீலாவை தூக்கி டூவீலரில் வைத்தார். மேலும் வண்டியின் நடுவில் சுசீலாவை அமரவைத்து பின்னால் இளையராணி அமர்ந்து பிடித்துக்கொண்டு அருகில் உள்ள  தனியார் மருத்துவமனை வரை சென்று சிகிச்சைக்கு சேர்க்க உதவினார். கொரோனா பீதியில் அனைவரும் ஒதுங்கிக்கொள்ள இளையராணி தைரியமாக உதவி செய்ததை சிலர் செல்போனில் பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுபற்றிய தகவல் முதல்வர் மு.க.ஸ்டாலின்  கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து இளையராணியை நேரில் வரவழைத்து பாராட்டினார். கலைஞர் எழுதிய ‘‘காலப்பேழையும் கவிதைச்சாவியும்’’ என்ற கவிதை புத்தகத்தை அவருக்கு பரிசாக வழங்கினார்.  இதனால் நெகிழ்ந்துபோன இளையராணி கூறுகையில், ”போலீஸ் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். கொரோனாவினால் உடற்தகுதி தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நம் வீட்டில் யாராவது விழுந்து கிடந்தால் சும்மா இருப்போமா? எனவே  தான் ஓடிச்சென்று உதவி செய்தேன். முதல்வர் என்னை அழைத்து பாராட்டியது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றார்.ரூ.2506 வழங்கிய பள்ளி மாணவிசேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே முத்தம்பட்டியை சேர்ந்த தனியார் பால் நிறுவன ஊழியர் செல்வகுமார்.  இவரது மகள் ஜெசிகா(10), வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 3ம் வகுப்பு படிக்கும்  போது, அரசு சார்பில் பெண் கல்வி ஊக்க தொகையாக ஆண்டுதோறும் ₹500 வழங்கப்பட்டு வந்தது. அந்த தொகையுடன், தான் சேமித்து வைத்திருந்த ₹1006 ஐயும் சேர்த்து, மொத்தம் ₹2506க்கான காசோலையை, நேற்று சேலம் வந்த முதல்வர்  மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதியாக  மாணவி ஜெசிகா நேரில் வழங்கினார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டி வாழ்த்தினார்….

Related posts

கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் 7ம் தேதி அமைதி பேரணி: சென்னை மாவட்ட திமுக அறிவிப்பு

முதுநிலை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களை தொலைதூர தேர்வு மையங்களுக்கு அனுப்புவதன் உள்நோக்கம் என்ன? வைகோ கண்டனம்

நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்