சேதமடைந்த தரைப்பாலத்தை இடித்துவிட்டு குருந்தங்குடியில் புதிய பாலம் கட்டித்தர வேண்டும்-கிராமமக்கள் கோரிக்கை

திருவாடானை :  திருவாடானை அருகே கடந்த ஒரு வருடமாக தரைப்பாலம் இடிந்து கிடக்கிறது. இதனால் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாடானை அருகே உள்ளது குருந்தங்குடி. இவ்வூருக்கு சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாக போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த சாலையின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தரைப்பாலம் கடந்த ஒரு வருடத்திற்கு  முன்பு பெய்த கன மழையில் ஒரு பகுதி இடிந்துவிட்டது. திருவாடானை சுற்றுப்பகுதியில் நெடுஞ்சாலையிலும் கிராமங்களுக்கு செல்லும் சிறிய தார்ச்சாலைகளிலும் ஏராளமான தரைப்பாலங்கள் கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் தரைப்பாலங்கள் கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில் பல இடங்களில் கனமழை காரணமாக தரைப்பாலங்கள் அடித்து செல்லப்பட்டு விட்டன. இதனால் கிராமப்புற இணைப்பு சாலைகளில் பயணம் செய்வது மழைக்காலங்களில் சவாலாகவே இருந்து வந்தது. கடந்த ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதும் திருவாடானை பகுதியில் உள்ள முக்கிய பாலங்களை கணக்கெடுத்து அவற்றை விரைவில் கட்டியும் முடித்து விட்டனர். குறிப்பாக திருவாடானையில் இருந்து மங்களக்குடி செல்லும் சாலையில் நகரிகாத்தான் அருகே சுமார் ரூ.40 லட்சம் செலவில் தரைப்பாலத்தை அகற்றிவிட்டு சிறிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அதேபோன்று திருவாடானையில் இருந்து திருவெற்றியூருக்கு இரண்டு தார்ச்சாலைகள் செல்கின்றன. இந்த இரண்டு தார்ச்சாலைகளிலும் மழைக்காலங்களில் கண்மாயின் மாறுகால் தண்ணீர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலத்தின் மேலே சென்றது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து இந்த இரண்டு தரைப்பாலங்களையும் உடனடியாக ரூ.80 லட்சம் செலவில் சிறிய மேம்பாலமாக கட்டி தற்போது செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் இன்னும் குக்கிராமங்களுக்கு செல்லும் தரைப்பாலங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றையும் சிறு மேம்பாலமாக கட்டித் தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. மக்கள் கூறுகையில், ‘‘திருவாடானை அருகே உள்ள குருந்தங்குடி கிராம சாலையில் கடந்த ஆண்டு பெய்த மழையினால் சிறிய தரைப்பாலம் ஒன்று பாதி இடிந்துவிட்டது. அதேபோன்று திருவாடானையில் இருந்து தோட்டா மங்கலம் செல்லும் சாலையில் மணிமுத்தாறு என அழைக்கப்படும் காட்டாறு செல்கிறது. அந்த சாலையில் சிறிய தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் மிகப் பழமையான பாலம் ஆகும். இவை இடிந்து விழவில்லை என்றாலும், கடந்த ஆண்டு பெய்த கன மழையால் பாலத்திற்கு மேலே 5 அடி உயரத்திற்கு தண்ணீர் சென்றது. இதனால் அந்த பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. சுமார் ஒரு மாதத்திற்கு மேல் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு அவசரத்திற்கு மக்கள் கயிறு கட்டி பாலத்தை கடந்து சென்றனர். இது போன்று ஏராளமான பாலங்கள் இன்னும் உள்ளன. இவற்றையெல்லாம் கணக்கெடுத்து இப்பகுதியின் தரைப் பாலங்களை அகற்றி சிறிய மேம்பாலம் கட்ட வேண்டும்’’ என்றனர். லாரி கவிழ்ந்து விபத்துகுறுந்தங்குடியை சேர்ந்த மகாலிங்கம், ராஜேந்திரன் ஆகியோர் கூறுகையில், ‘‘செகுடி, சிறு மலைக்கோட்டை, கவலைவென்றான் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இதில் தான் பயணிக்கின்றனர். மேலும் தேவகோட்டை, எஸ்பி.பட்டினம் நெடுஞ்சாலையுடன் பயணித்து ஈசிஆர் சாலையில் செல்லலாம். மற்றொரு வழியாக திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து இணைந்து திருவாடானை தேவகோட்டை செல்லலாம். இப்படி பல  கிராமங்களை இணைக்கும் இந்த சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் கடந்த ஓராண்டுக்கு முன்பு கடும் மழையால் பாதிக்கப்பட்டு இடிந்துவிட்டது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இந்த சாலையை கடந்த லாரி ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த சாலையை கடக்கும் போது வாகனத்தில் செல்வோர் அடிக்கடி விபத்து ஏற்பட்டு விழுந்து காயத்துடன் செல்கின்றனர். எனவே இந்த தரைப்பாலத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் சிறிய அளவிலான மேம்பாலம் கட்ட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்….

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்