சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ₹4.80 கோடி நிதி

சேலம், ஜூலை 3: சேலம் மாநகரில் திட்டப்பணிகளால் சேதமடைந்த சாலைகள் ₹4.80 கோடியில் சீரமைக்கப்பட உள்ளது. சேலம் மாநகராட்சியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியும், பாதாள சாக்கடை திட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகளால், சாலைகள் வெட்டி வீசப்பட்டு, குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருப்பினும் அவ்வப்போது சாலைகளை சீரமைக்கும் பணிகளையும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இருப்பினும் மாநகரில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இச்சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, 2024-25ம் ஆண்டு 15வதுமத்திய நிதி குழு பரிந்துரையின் பேரில், சேலம் மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகள், இயற்கை இடர்பாடுகளினால் சேதமடைந்த சாலைகளை மறு சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல், மாநகரில் பல்வேறு திட்டங்களில் பழுதடைந்துள்ள சாலைகள் மறு சீரமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் டெண்டர் விடப்பட்டு மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வட கிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படவுள்ளது.

இதுகுறித்து சேலம் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மாநகராட்சியின் 60வார்டுகளிலும் 1037.173 கி.மீ நீளத்திற்கு 7587 சாலைகளும், 1200.925 கி.மீ.நீளத்திற்கு மழைநீர் வடிகால் மற்றும் 5290 சிறுபாலங்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை, குடிநீர் திட்டங்களுக்கு குழாய்கள் பதிக்கப்பட்ட சாலைகள், இயற்கை இடர்பாடுகளால் சேதமடைந்த சாலைகளின் மறுசீரமைப்பு பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டம், நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம், 15வது மத்திய நிதிக்குழு நிதி ஆகிய திட்டங்களின் கீழ் ₹158.71 கோடியில் 308.549 கி.மீ நீளத்திற்கு 1939 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டது. இவற்றில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது, 2024-2025ம் ஆண்டு 15வது மத்திய நிதிக்குழுவின் பரிந்துரையின் பேரில், மாநகரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ஒன்றிய அரசு மானியமாக ₹4.80 கோடியை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, 88 எண்ணிக்கையில் 9.267 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்குகிறது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related posts

பல்கலைக்கழக நிர்வாகம் தகவல் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்

முன்னாள் துணை கலெக்டர் மயங்கி விழுந்து சாவு வேலூர் கலெக்டர் அலுவலகத்தில்

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றினால் இடமாற்றம் பட்டியல் தயாரிக்க உத்தரவு பள்ளிக்கல்வித்துறையில்