சேதமடைந்த குஜராத் மாடல் சாலை தாமரை மலர்ந்துவிட்டதாக சமூக ஆர்வலர் கோஷம் மழைநீரில் தாமரை பூக்களை மிதக்கவிட்டு நூதன போராட்டம்

புதுச்சேரி, ஜன. 9: புதுச்சேரியில் மழையால் சேதமடைந்த சாலையில் தேங்கியுள்ள மழைநீரில் தாமரைப்பூவை மிதக்கவிட்டு தாமரை மலர்ந்து விட்டதாக அரசுக்கு எதிராக சமூக ஆர்வலர் கோஷமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி- கடலூர் சாலை குண்டும், குழியுமாக இருந்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். ஜல்லிகள் பெயர்ந்து புழுதி பறந்ததால், அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. எனவே புதிதாக சாலை அமைக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் அரசை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. சாலை தரமானதாக அமைக்கப்படவில்லையென பொதுமக்கள் அவ்வப்போது குற்றம் சாட்டி வந்தனர். இதற்கிடையே புதுச்சேரி – கடலூர் சாலை, இரண்டு தினங்களாக பெய்து வரும் மழைக்கு தாக்கு பிடிக்காமல் மீண்டும் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் சமூக ஆர்வலர் சுந்தர்ராஜன் தனது சட்டை, பேண்டின் முன்பக்கத்தை சரியாகவும், பின்பக்கத்தை கிழித்துவிட்டுக்கொண்டு, தலையில் ஹெல்மெட் அணிந்தபடி மரப்பாலம் பகுதிக்கு வந்தார். அப்போது திடீரென சாலையில் தலைக்குப்புற படுத்துக் கொண்டார். அங்கிருந்த பள்ளத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் தாமரை பூக்களை மிதக்கவிட்டு, புதுச்சேரியில் தாமரை மலர்ந்துவிட்டதாகவும், இதுதான் குஜராத் மாடல் சாலை எனவும் கோஷமிட்டார். சாலையை தரமானதாக அமைக்காத ஆளும் என்ஆர்காங்கிரஸ் – பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டார். முக்கிய சந்திப்பில் தனிநபர் ஒருவர் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு