சேடபட்டி அருகே ரேஷன் கடை, பஸ் வசதி தேவை எம்எல்ஏவிடம் பொதுமக்கள் மனு

 

பேரையூர், மே 6: சேடபட்டி அருகே உள்ள பரமன்பட்டி கிராமத்தில் ரேஷன் கடை அமைப்பதுடன், இந்த கிராமத்திற்கு பஸ் வசதி செய்துதர வேண்டும் என்று உசிலம்பட்டி எம்எல்ஏவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரையூர் தாலுகா, சேடபட்டி அருகேயுள்ளது பரமன்பட்டி கிராமம். இக்கிராமத்தில் நேற்று நடைபெற்ற கோயில் திருவிழாவில் உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் பங்கேற்றார். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் அவரை பொதுமந்தைக்கு வரவழைத்து மரியாதை செலுத்தினார்கள். பின்னர் பரமன்பட்டியில் ரேஷன் கடை இல்லாததால் 2 கி.மீ தூரமுள்ள ஆண்டிபட்டிக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டியதாக உள்ளது.

இக்கிராமத்தில் இருந்து பஸ் வசதி இல்லாததால் பெண்கள், முதியோர் உள்ளிட்ட அனைவரும் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை தொடர்கிறது. எனவே பரமன்பட்டியில் ரேஷன் கடை அமைத்துத்தர வேண்டும். உசிலம்பட்டி – பேரையூர் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்களில் சிலவற்றை பரமன்பட்டி வழியாக இயக்க வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ அய்யப்பன், இப்பிரச்னை குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக ஓபிஎஸ் அணி சேடபட்டி ஒன்றிய செயலாளர் பெருமாள், தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகைச்சாமி, உசிலம்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை