செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு பிரதமர் மோடியை நேரில் அழைக்க தமிழக எம்.பி.க்கள் டெல்லி பயணம்: முதல்வர் சார்பில் 19ம் தேதி அழைப்பிதழ் வழங்குகிறார்கள்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவிற்கு பிரதமர் மோடியை நேரில் அழைக்க தமிழக எம்.பி.,க்கள் 19ம் தேதி டெல்லி சென்று சந்தித்து முதல்வர் சார்பில் அழைப்பிதழ் வழங்குகிறார்கள். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ம் தேதி முதல் அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில், 187 நாடுகளை சேர்ந்த 2,000க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டிற்கு வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வரவேற்க மிகச் சிறப்பான ஏற்பாடுகள் தமிழக அரசின் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக வீரர்கள், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பினர், விருந்தினர்கள், பத்திரிகையாளர், ஊடகவியலாளர்கள் தங்குவதற்காக நவீன வசதிகளுடன் கூடிய நட்சத்திர விடுதிகளில் 2,000 அறைகள் மற்றும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டு வருகிறது. இப்போட்டிக்கான தொடக்க விழா மிகப் பிரமாண்டமாக சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் 28ம் தேதி மாலை நடக்கிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை உலக மக்கள் அனைவரும் அறியும் வகையில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்கான அழைப்பிதழை நேரில் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்வதாக இருந்தது. இதற்கிடையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு (கொரோனா) ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக கடந்த 3 நாட்களாக சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி, உடல்நலம் குறித்து விசாரித்தார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் வரும் 28ம் தேதி துவங்க உள்ள உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அழைப்பு விடுக்க நானே நேரில் வருவதாக இருந்தது என்பதை குறிப்பிட்டார். தான் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக என்னால் நேரில் வர முடியாது. அதனால், தமிழக எம்பிக்கள் தங்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்குவார்கள். அதை ஏற்று, தாங்கள் சென்னை வந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதற்கு, பிரதமர் மோடியும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தமிழக எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் வருகிற 19ம் தேதி டெல்லியில், பிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ளனர். அப்போது, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அழைப்பிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் பிரதமர் மோடியிடம் நேரில் வழங்குகிறார்கள்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்