செல்போன் வீடியோ காலில் ஆவடி நரிக்குறவர் மாணவிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

சென்னை: ஆவடி நரிக்குறவர் காலனியில் வசித்து வரும் மாணவ- மாணவிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ காலில் பேசி குறைகளை கேட்டறிந்தார். ஆவடி பஸ் நிலையம் பின்புறம் நரிக்குறவர் காலனி உள்ளது. இங்கு 50க்கு மேற்பட்ட வீடுகளில் நரிக்குறவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். சமீபத்தில் மேற்கண்ட காலனியை சேர்ந்த மாணவிகள் பிரியா, திவ்யா, தர்ஷினி ஆகியோர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அதில், அவர்கள் தங்களது கல்வி, சமூகம் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து விளக்கமாக பேசி குமுறலை வெளிப்படுத்தி இருந்தனர்.இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது. இதனை அடுத்து, நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலின் 3 மாணவிகளை தலைமை செயலகத்துக்கு அழைத்து பேசினார். அப்போது, அவர் படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தருவதாக உறுதியளித்தார். இந்நிலையில், நேற்று காலை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், நரிக்குறவர் காலனிக்கு நேரில் சென்றார். பின்னர், அவர் முதல்வரை சந்தித்து பேசிய 3 மாணவிகள் உள்பட குடியிருப்பில் உள்ள 40க்கு மேற்பட்ட  குழந்தைகளுடன் கல்வி தொடர்பான பிரச்னைகள் குறித்து விவரமாக கேட்டறிந்தார். அப்போது, அவர் மாணவ- மாணவிகளுக்கு படிப்புக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். மேலும்,  நரிக்குறவர் காலனிக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என  உறுதியளித்தார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் நாசர்  முன்னிலையில் நரிக்குறவர் மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வீடியோ காலில் பேசினார். பின்னர், நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் நாசர் அங்குள்ள மாற்றுத்திறனாளிக்கு இரு சக்கர வாகனம், உதவி தொகைக்கான ஆணையை வழங்கினார். மேலும், அவர் அங்கு ஆவின் பால் பூத் அமைக்க  உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தார். நிகழ்ச்சியில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்க்கீஸ், ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், துணை மேயர் எஸ்.சூரியகுமார், மாநகராட்சி ஆணையர் சரஸ்வதி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரி எஸ்.பாபு, மதிமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் வக்கீல் ஆவடி அந்திரிதாஸ், திமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் நடுகுத்தகை கே.ஜெ.ரமேஷ், பதாகை சிங்காரம், மாநகர செயலாளர்கள் ஜி.ராஜேந்திரன், ஜி.நாராயணபிரசாத், கவுன்சிலர் ஆசீம்ராஜா உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்….

Related posts

பால் குடித்துவிட்டு உறங்கியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு கைக்குழந்தை உயிரிழப்பு: போலீசார் விசாரணை

பிள்ளைகள் வளந்துவிட்டார்கள் என தொடர்பை துண்டித்ததால் பெண்ணை தீவைத்து கொளுத்திய கள்ளக்காதலன்: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை, காதலன், மருமகனுக்கும் தீக்காயம்

சாலையில் திரியும் மாடுகளால் விபத்து, காயம் ஏற்பட்டால் உரிமையாளர் மீது வழக்கு: ஆலோசனை கூட்டத்தில் முடிவு