செல்போன் திருடியதாக பிடிபட்டவர் உயிரிழப்பு மாஜிஸ்திரேட் முன்னிலையில் உடல் பிரேத பரிசோதனை: உறவினர்களிடம் ஒப்படைப்பு

பெரம்பூர்: செல்போன் திருடிய வழக்கில் போலீசாரிடம் பிடிபட்டு, விடுவிக்கப்பட்டவர் ரவுடி உயிரிழந்த நிலையில், அவரது உடல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரம்பூர் நீளம் தோட்டம் 3வது தெருவை சேர்ந்தவர் தினேஷ்குமார் (26), கூலி தொழிலாளி. இவர், மனைவி கவுசல்யா மற்றும் மகள் வினோதினி ஆகியோருடன் வசித்து வந்தார். கடந்த செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு தினேஷ்குமார் சென்றுள்ளார். இந்நிலையில், காலை 10:30 மணிக்கு கவுசல்யாவை தொடர்பு கொண்ட போலீசார், கண்ணகி நகர் சுங்கச்சாவடி அருகே தினேஷ்குமாரை பிடித்து வைத்துள்ளதாகவும், அவர் திருடிய செல்போனை கொண்டு வரும்படியும் கூறியுள்ளனர்.இதனையடுத்து, தினேஷ்குமார் கவுசல்யாவிடம் போனில் பேசியுள்ளார். அவர் திருடிய செல்போனை மூலக்கொத்தலம் அருகே உள்ள தனது நண்பர் ஒருவரிடம் கொடுத்துள்ளதாகவும், அதனை வாங்கி வரும்படியும் கூறியுள்ளார். இதனால், கவுசல்யா தனது மாமியார் லதா என்பவருடன் ஆட்டோவில் சென்று மூலக்கொத்தளத்தில் தினேஷ்குமாரின் நண்பரிடமிருந்து செல்போனை வாங்கிக்கொண்டு கண்ணகி நகர் சுங்கச்சாவடி அருகே சென்று செல்போனை கொடுத்துள்ளனர். அங்கு ஒரு பெண் உதவி ஆய்வாளர் மற்றும் 3 காவலர்கள் இருந்துள்ளனர். செல்போனை வாங்கிக் கொண்டவர்கள் தினேஷ்குமாரை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.மாலை 3 மணியளவில் வீட்டிற்கு வந்த தினேஷ்குமார் மிகவும் சோர்வாக இருந்ததால், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று விட்டு, வீட்டிற்கு வந்து தோசை சாப்பிட்டுவிட்டு படுத்துள்ளார். இரவு 9:30 மணிக்கு எழுந்து பாத்ரூமிற்கு சென்ற தினேஷ்குமார், ரத்தவாந்தி எடுத்து அங்கேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று காண்பித்துள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே தினேஷ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதனையடுத்து, அவரது உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த தினேஷ்குமாரின் அண்ணன் செந்தில்குமார் என்பவர், தினேஷ்குமாரை போலீசார் தாக்கி காயம் ஏற்படுத்தி விட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், புளியந்தோப்பு சரக துணை கமிஷனர் ஈஸ்வரன் இதுகுறித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், காரப்பாக்கம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த ஸ்டீபன் கிளோடியோ செவ்வாய்கிழமை பேருந்தில் பயணம் செய்தபோது, அவரது செல்போனை திருடியதாக தினேஷ்குமார் கையும், களவுமாக மாட்டிக் கொண்டதும், கண்ணகி நகர் சுமன்சாவடி அருகே உள்ள போலீசாரிடம் பொதுமக்கள் தினேஷ்குமாரை ஒப்படைத்ததும் தெரியவந்தது. இந்நிலையில் செல்போன் திருட்டு வழக்கில் துரைப்பாக்கம் காவல் நிலைய எஸ்ஐகள் கலைச்செல்வி, ராஜாமணி, தலைமை காவலர் பார்த்தசாரதி ஆகிய 3 பேரும் தினேஷ்குமாரை விசாரித்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த தினேஷ்குமாரின் உடலை வாங்கப் போவதில்லை என்று கூறி அவரது உறவினர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, இந்த வழக்கை எழும்பூர் 5வது மாஜிஸ்திரேட் ஜெகதீசன் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்ற மாஜிஸ்திரேட் ஜெகதீசன், தினேஷ்குமாரின் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்.இந்நிலையில், நேற்று காலை அவரது மேற்பார்வையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ எடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடித்து அவரது உடல் அவரது மனைவி கவுசல்யா மற்றும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை வர சில நாட்கள் ஆகும் என்பதால் தொடர்ந்து மாஜிஸ்திரேட் இந்த வழக்கை விசாரிப்பார் என்றும் போலீசார் தரப்பிலிருந்து, தினேஷ்குமாரின் குடும்பத்திற்கு எந்தவித அச்சுறுத்தல்களும் ஏற்படாது எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தினேஷ்குமாரின் உடலை பெற்றுக் கொண்ட அவரது உறவினர்கள் திருவிக நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் சென்று சடங்குகளை முடித்து பல்லவன் சாலையில் உள்ள தாங்கள் இடுகாட்டில் அவரது உடலை அடக்கம் செய்தனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை