செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டு சிறை: கும்பகோணம் கோர்ட் தீர்ப்பு

கும்பகோணம், ஏப்.12: பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகர் செட்டிமண்டபம், அன்னை அஞ்சுகம் நகர் விரிவாக்கம், எஸ்.எஸ்.நகரில் வசிப்பவர் தங்கராஜ் மனைவி திருமகள் (70). ஓய்வுபெற்ற ஆசிரியையான இவர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி தனது வீட்டிற்கு அருகே உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த 2 வாலிபர்கள் திருமகள் அணிந்திருந்த 6 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசில் திருமகள் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கொண்டு தப்பி ஓடிய, கும்பகோணம் அடுத்த சோழபுரம் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சோமசுந்தரம் மகன் கார்ல்மார்க்ஸ் (32), விளந்தகண்டம் கீழத்தெருவை சேர்ந்த திருச்செல்வம் மகன் பிறையரசன் (26) ஆகியோரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கும்பகோணம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், குற்றவாளிகள் இருவருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், பணம் கட்ட தவறினால் 9 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதனைத் தொடர்ந்து கார்ல்மார்க்ஸ் மற்றும் பிறையரசன் ஆகியோரை நேற்று முன்தினம் மாலை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது