செயற்கை முறையில் பழுக்கவைத்த ரூ.28 ஆயிரம் பழங்கள் பறிமுதல்: அதிகாரிகள் நடவடிக்கை

 

மதுரை: மதுரை பழக்கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் உள்ளிட்ட ரூ.28 ஆயிரம் மதிப்பிலான பழ வகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயராம பாண்டியன் தலைமையில் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதன்படி அவர்கள் அங்குள்ள சுமார் 130 கடைகளில் சோதனைகளை நடத்தினர். அப்போது கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 154 கிலோ மாம்பழம், 45 கிலோ திராட்சை, 60 கிலோ தர்பூசணி மற்றும் 18 தார் (420 கிலோ) வாழைப்பழம் உட்பட சுமார் ரூ.28 ஆயிரம் மதிப்பிலான பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும் அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளின் உபயோகம் இருப்பதை கண்டறிந்து ஒரு கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தரமற்ற உணவு பொருட்கள் மற்றும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். மேலும் உணவு பொருள் கலப்படம் குறித்து பொதுமக்கள உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி