Thursday, July 4, 2024
Home » செம்மையாக்கும் சிவந்த தோற்றம்!

செம்மையாக்கும் சிவந்த தோற்றம்!

by kannappan

பிரச்னை தீர அடுத்தவர் உதவியை நாடுகிறோம். அவர் என்னதான் பெரும் பதவி, பணம், காசு படைத்தவராக இருந்தாலும்; அவரால் நம் பிரச்னையைத் தீர்க்க இயலவில்லை. அதாவது, மனிதர்கள் யாராலும் பிரச்னை தீரவில்லை. என்ன செய்வது? அதற்கு ஞான நூல்கள் வழிகாட்டுகின்றன. ‘‘கவலைப் படாதே! சிவந்த (மருதாணி பூசிய, செம்பஞ்சுக் குழம்பு தீட்டிய) திருவடிகள்; சிவந்த ஆடைகள்; சிவந்த கரங்கள்; சிவந்த வாய்; இயற்கையாகவே செவ்வரி ஓடிய சிவந்த கண்கள்; சிவந்த திலகம் என அம்பிகையின் திருவடி முதல் திருமுடி வரை சிவந்த தோற்றத்தில் தியானம் செய்து வந்தால், மனிதர்கள் யாராலும் தீர்க்க முடியாத பிரச்னையை அம்பிகை தீர்த்து வைப்பாள்.பரத்வாஜ முனிவர் மூலமாக, தேவீ பாகவதம் இதை விரிவாகவே கூறுகிறது. இவ்வாறு தியானித்து, பிரச்னையிலிருந்து விடுபட்டவர், ‘அபிராமி பட்டர்’.அனைவரும் அறிந்தது அபிராமிபட்டர் வரலாறு. தெய்வ தரிசனத்திற்காக வந்த மன்னர், ‘‘இன்று என்ன திதி?’’ என்று கேட்க, ‘‘பௌர்ணமி’’ என்று பதிலளித்தார் அபிராமிபட்டர். (அப்போது அவர் பெயர் சுப்பிரமணியம். அபிராமி பட்டர் என்பது பிறகு வந்தது)அரசர் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அன்றைய திதி ‘அமாவாசை திதி’. அமாவாசையன்றுபோய் பௌர்ணமி என்றால், நிலா வருமா? ‘‘இன்று மாலை நிலவு வந்தாக வேண்டும். இல்லாவிட்டால்…’’ என்று கூறி கடுமையாக எச்சரித்துவிட்டுப் போய் விட்டார், மன்னர்.அமாவாசையன்று நிலா வருவதாவது? அபிராமி பட்டர் கலங்கவில்லை. அம்பிகையை நோக்கித் துதித்துப் பாடினார். அப்பாடல்களே அபிராமி அந்தாதி. அவர் பாட நிலா வந்தது தெரிந்த வரலாறுதானே!அபிராமி பட்டர் அம்பிகையைத் துதிக்கத் தொடங்கிய முதற்பாடல்:உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலைதுதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்னவிதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.- என்று பாடித் தொடங்கினார். இப்பாடலில் உள்ள அனைத்துமே சிவப்பு. உதிக்கின்ற சூரியனைப் போன்ற திலகம் சிவப்பு, மாணிக்கம், சிவப்பு, மாதுளம் பூ, சிவப்பு, மின்னல், கொடி போன்ற அம்பிகையைத் துதித்த லட்சுமி தேவி செந்தாமரை மலரில் எழுந்தருளியிருப்பவள். செந்தாமரை ‘சிவப்பு’. குங்குமத்தோயம் எனப்படும் குங்குமக் கலவை ‘சிவப்பு’.இவ்வாறு உச்சித்திலகம் முதல் திருமேனி வரை முழுமையாகச் சிவந்த கோலத்தில் தியானித்ததால், அபிராமிபட்டரின் தீராததுயர் தீர்ந்தது; நிலவை வெளிப்படுத்தி ஔிவீசச் செய்தாள், அம்பிகை.சிவந்த திருக்கோலத்தில் அம்பிகையைத் தியானித்தால் தீராத துயர் விலகும் என ஞான நூல்கள் சொன்னதற்குப் பிரத்யட்ச உதாரணம், அபிராமிபட்டரின் வாழ்க்கையும் அவரது ‘உதிக்கின்ற செங்கதிர்’ என்ற பாடலும். அதன்படியே தியானிப்போம்; அல்லல்கள் எல்லாம் விலகிப் போம்!V.R. சுந்தரிபித்ருக்களின் ஆசி கிட்டும் நாமங்கள்பார்வதிதேவி, பர்வதராஜனிடம் தன் இருப்பிடங்கள் பற்றிக் கூறி, ‘‘இந்த நாமங்களை விடியற்காலையில் படித்தால், அந்த விநாடியே எல்லாவிதமான பாவங்களும் நசித்துப்போய் விடும். சிராத்த காலங்களில் இந்தத் தூய்மையான நாமங்களைப் படித்தால், பித்ருக்களுக்கு முக்தி கிடைக்கும்’’ என்று கூறினாள்.அம்பிகை சொன்ன அந்த இருப்பிடங்களில் சிலவற்றின் இன்றையப் பெயர்கள் தெரியாவிட்டாலும் கூட, அம்பிகையின் வாக்குப்படி அந்த நாமங்களை அப்படியே படிப்பது நமக்கு நன்மை தரும். நவராத்திரி காலத்திலாவது அந்த நாமங்களைச் சொல்லி, நாம் நலமடைய வேண்டும் என்பதற்காகவே அவை இங்கே குறிப்பிடப்படுகின்றன.லட்சுமிதேவிக்கு வசிக்குமிடமாகவும் மகாஸ்தானமாகவும் இருக்கும் கோலாபுரம்; ரேணுகாதேவியின் இருப்பிடமான மாத்ருபுரம்; துர்கா தேவியின் உத்தமமான இருப்பிடங்களான துளஜா புரம், சப்த சிருங்கம், இங்குலை, ஜ்வாலாமுகி, சாகம்பரி, பிராமரி, ரக்த தந்திரிகா; அன்னபூரணியின் இருப்பிடமாகவும் தனக்கு மேல் உயர்ந்ததாக இல்லாததுமான காஞ்சீபுரம்; பராசக்தியே மணலால் சிவலிங்கம் பிடித்துப் பூஜைசெய்த ஏகாம்பரம்; யோகேஸ்வரியால் பிரதிட்டை செய்யப்பட்ட தேஜோஸ்தானம்; விந்தியா சலம்; பீமாதேவி; விமலாதேவி; நீலாம்பிகை; திருவானைக்காவல்; நகரம்; நேபாளத்தில் குஹ்யகாளி; தகராகாசமான சிதம்பரம்; வேதாரண்யம்; சீனத்தில் நீல சரஸ்வதி; வைத்தியநாதத்தில் வகலா; புவனேஸ்வரியின் இருப்பிடமான மணித்வீபம்; திரிபுர பைரவியின் இடமான காமாக்கியம்; காயத்திரியின் இடமான புஷ்கரம்; சண்டிகாதேவியின் இடமான அமரேசம்; புஸ்கரேட்சணி இடமான பிரபாசம்; லிங்க தாரணியின் நைமிசம்; புஷ்கராட்சியின் புருஹூதை; ரதியின் ஆஷாடம்; சண்ட – முண்டி களின் மைசூர்; பரமேஸ்வரியின் தண்டினி; பராபூதி; பூதி; நகுலேசுவரியின் நகுலம்; சந்திரிகாவின் அரிச்சந்திரம்; சங்கரியின் பர்வதம்; திரிசூலியின் திருவையாறு; குட்சுமாவின் ஆம்தாத்கேசு வரம்; சங்கரியின் மகா காளேசுவரம்; சர்வாணியின் மத்திமம்; மார்கதாயினியின் கேதாரம்; பைரவியின் பைரவம்; மங்களாவின் கயை; ஸ்தாணுப்பிரியையின் குரு சேத்திரம்; சுவாயம்பவியின் நகுலம்; உக்ராதேவியின் கனகலம்; விசுவேசுவரியின் விமலேசுவரம்; மகாந்தாவின் மகாந்தகை; பீமேசுவரியின் பீமசேத்திரம்; சங்கரியின் பவானி; ருத்ராணியின் அர்த்த கோடி; விசாலாட்சியின் அவிமுக்தம் எனும் காசி; மகாபாகாவின் மகாலயம்; பத்ரகாளியின் கோகர்ணம்; பத்ரியின் பத்ரகர்ணிகை; உத்பலாட்சியின் சுவர்ணாட்சி; ஸ்தாண்வீயின் ஸ்தாணு; கமலாம்பிகையின் திருவாரூர் எனும் கமலாலயம்; பிரசண்டையின் சகலண்டகம்; திரிசந்தியா தேவிகளின் குருண்டலை; மகுடேசுவரியின் மாகோடம்; கண்டகியின் மண்டலேசம்;காளிகாவின் காலஞ்சரம்; துவனி ஈஸ்வரியின் சங்கு கர்ணம்; தூலகேசுவரியின் தூலகேசுவரம்; ஹ்ருல்லேகா மந்திரத்தின் இருப்பிடமான ஞானிகளின் இதயக்கலசம்.இந்த நாமங்களைச் சொல்வதற்கு ஒன்றரை முதல் இரண்டு நிமிடங்கள் வரை ஆகும். இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி, நவராத்திரியின் போதாவது இவற்றைச் சொல்வது, பித்ருக்களின் சாபங்களில் இருந்து விடுதலை அளித்து நலத்தைத் தரும்….

You may also like

Leave a Comment

7 + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi