செம்மஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ₹1.20 கோடியில் டயாலிசிஸ் மையம்

துரைப்பாக்கம், செப்.23: செம்மஞ்சேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ₹1.20 கோடியில் டயாலிசிஸ் மையத்தை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 200வது வார்டுக்கு உட்பட்ட செம்மஞ்சேரி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ₹1.20 கோடி மதிப்பீட்டில் 10 படுகைகள் வசதி கொண்ட டயாலிசிஸ் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் பிரியா கலந்துகொண்டு, புதிய டயாலிசிஸ் மையத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், 15வது மண்டல குழு தலைவர் மதியழகன், கவுன்சிலர்கள் முருகேசன், சங்கர் மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மேயர் பிரியா கூறுகையில், ‘‘சென்னை மாநகராட்சி பல வளர்ச்சி பணிகள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 15வது மண்டலம் செம்மஞ்சேரியில் ரோட்டரி கிளப்புடன் இணைந்து, சென்னை மாநகராட்சி சார்பாக டயாலிசிஸ் மையம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே 8 டயாலிசிஸ் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தொடங்கப்பட்டது 9 டயாலிசிஸ் மையமாகும். இதுவரை 55 ஆயிரத்து 617 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். தற்போது 568 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர்கள் தேவைப்படும் இடத்தில் அனைத்து பகுதிகளிலும் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள்,’’ என்றார்.

Related posts

உடுமலையில் செயல் இழந்த சிக்னல்கள் விபத்து ஏற்படும் அபாயம்

சாலை பாதுகாப்புக்காக பள்ளி பகுதிகளில் வேகத்தடைகள் அமைப்பு

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு