செப்.26ம் தேதி நவராத்திரி தொடக்கம் நாகர்கோவிலில் கொலுபொம்மைகள் விற்பனை ஜோர்

நாகர்கோவில் : நவராத்திரி விழா வரும் 26ம் தேதி தொடங்க உள்ள நிலையில் நாகர்கோவிலில் நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. மகிஷாசுரன் என்ற அரக்கன் மக்களை துன்புறுத்தி வந்தநிலையில் ஆதிபராசக்தி 9 நாள் போரிட்டு அவனை வதம் செய்தார். 10வது நாள் வெற்றிகொண்டார். இதனை நவராத்திரி விழாவாக காண்டாடுகின்றனர். வட இந்தியாவில் ராவணனை எதிர்த்து ராமர் போரிட்டு வெற்றிபெற்றதன் அடையாளமாக தசரா என்று கொண்டாடுகின்றனர். குஜராத் உள்ளிட்ட மேற்கு இந்திய பகுதிகளில் தாண்டியா நடனத்துடன் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் கடைசி ஐந்து நாட்கள் இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் துர்கா பூஜை என்று கொண்டாடப்படுகிறது. தென்னிந்திய பகுதிகளில் கொலு வைத்து நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை விசேஷமாக ெகாண்டாடப்படும். 10ம் நாள் விஜயதசமி அன்று குழந்தைகளுக்கு ஏடு தொடங்குதல் என்ற வித்யாரம்பம் நிகழ்வுகள் தமிழ்நாடு, கேரளாவில் நடைபெறுகிறது.புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 10 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வரும் 26ம் தேதி தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் 9 வது நாள் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. விழாவின் 10வது நாள் விஜயதசமி ஆகும். இதையொட்டி, விழா நடக்கும் 9 நாட்களிலும் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங்கேறும். முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரியின்போது பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. நவராத்திரியின் முக்கிய அம்சம் கொலு வைப்பதாகும். 3 முதல் 9 படிகள் என அவரவர் வசதிக்கு ஏற்ற படி அமைத்து, கொலு பொம்மைகளை அலங்கரிக்கின்றனர். இதையொட்டி தற்போது கொலு பொம்மைகள் விற்பனை தொடங்கி உள்ளது. நாகர்கோவிலில் வடிவீஸ்வரம், கோட்டார், பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை கடைகள் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளன. கடைகளிலும் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தசாவதாரம், திருமணம், அறுபடை வீடு, அஷ்டலஷ்மி, ஆண்டாள் திருமஞ்சனம், கிருஷ்ண லீலை, சீதா கல்யாணம், வாஸ்து லட்சுமி, விஸ்வரூபம், சீமந்தம் செட் பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை என வகைவகையான கொலு பொம்மைகள் விற்பனைக்காக வரவழைக்கப்பட்டுள்ளன.மண்ணாலான சிலைகள் மட்டுமின்றி, சார்ட் பேப்பர், காகிதக் கூழ், பிளாஸ்ட் ஆப் பாரிஸ் ஆகியவற்றிலும் செய்யப்பட்ட சிலைகள் உள்ளன. சிறிய ரக பொம்மைகள் ₹50 ல் இருந்து விற்பனைக்கு உள்ளது. பெரிய ரக பொம்மைகள் ₹2000ம் முதல் ₹4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு செட் பொம்மைகள் ₹500 முதல் ₹1000ல் இருந்து கிடைக்கிறது. மதுரை உள்பட வெளி மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நவராத்திரி விழாக்கள் உற்சாகம் இழந்து காணப்பட்டது.சிறப்பு நிகழ்ச்சிகள் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு நவராத்திரி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கொலுபொம்மைகள் விற்பனையும் சூடுபிடித்துள்ளது….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்