சென்னை ரவுடியிடம் பணம் கேட்டு சிறை காவலர்கள் டார்சர் நேரில் சந்தித்த மனைவி புகார் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள

வேலூர், அக்.2: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னை ரவுடியிடம் பணம் கேட்டு காவலர்கள் டார்சர் செய்வதாக நேரில் சந்தித்த மனைவி புகார் தெரிவித்தார். சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராதாகிருஷ்ணன். இவர் இரட்டை ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ரவுடி ராதாகிருஷ்ணனின் மனைவி தீபிகா நேற்று சிறையில் சந்தித்து பேசினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 2013ம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு கொலை வழக்கில் 2வது குற்றவாளியான எனது கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் 4 பேர் தண்டனை பெற்றனர். அவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். எனது கணவரை மட்டும் பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். பிறகு கடந்த மாதம் அவரை வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு வந்து கொடுமைப்படுத்துகிறார்கள். சரியான உணவு வழங்குவதில்லை. சிறை அலுவலர்கள் பணம் கேட்டு டார்சர் செய்வதாகவும், பணம் தரவில்லை என்றால் வெளியில் அழைத்து செல்லும் போது என் கவுண்டர் செய்து விடுவதாகவும் மிரட்டுவதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவரை சந்தித்த போதும் இதையே சொன்னார்.

சிறையில் உள்ள பிற கைதிகளுக்கும் டார்ச்சர் இருப்பதாக கூறப்படுகிறது. எப்போதோ செய்த தவறுக்காக அவருக்கு இரட்டை ஆயுள் விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையை ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் சிறையில் நடக்கும் சித்ரவதைகளில் இருந்தும் என்கவுண்டரில் இருந்தும் அவரை காப்பாற்ற வேண்டும். வேலூர் மத்திய சிறையில் நடக்கும் அத்துமீறல் குறித்து தமிழக அரசும், நீதிமன்றமும் தலையிட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அவர் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. கணவரை சிறை மாற்றுவதற்காக இதுபோன்ற தகவல்களை தெரிவித்து இருக்கலாம்’ என்றனர்.

Related posts

புதிய பஸ் நிலையத்திற்குள் பைபாஸ் ரைடர் பஸ்கள் வர வேண்டும்: அனைத்து கட்சியினர் மனு

சங்கம் வைக்கும் உரிமை கோரி சிஐடியு சாலைமறியல் போராட்டம்

பட்டாசு ஆலை விபத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும்: கிராமமக்கள் கோரிக்கை