சென்னை மெட்ரோவில் திருநங்கைகள்

நன்றி குங்குமம் தோழி அண்மையில் சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பொது மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.  இதில் புதிதாய் உருவாகியுள்ள புது வண்ணாரப்பேட்டை ரயில் நிலையத்தில் 10 திருநங்கைகளையும், 4 திருநம்பிகளையும் பணியமர்த்தி, மெட்ரோ ரயில் நிர்வாகம் பெருமைப்படுத்தியுள்ளது. இவர்கள் டிக்கெட் வினியோகம், பயணிகளின் வெப்பநிலை அறிதல், டிக்கெட் பரிசோதனை, பொதுத் தளம், உதவி மையம், வாகன நிறுத்து தளம் என பணியாற்றி வருகின்றனர்.தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு (TANSAC) சங்கத்தின் திட்ட இயக்குநராக இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி தீபக் ஜேக்கப் முன்னெடுப்பில், சென்னை நுங்கம்பாக்கத்தில் மாற்றுப் பாலினத்தவர்களுக்காக செயல்படும் சகோதரன் மற்றும் அதன் கிளை அமைப்புகளான தோழி, சிநேகிதி அமைப்புகளும் கைகோர்த்து, சென்னை மெட்ரோ நிறுவனம் இந்த மாபெரும் மாற்றத்தை செய்துள்ளனர். சகோதரன் அமைப்பின் பொது மேலாளர் ஜெயா மற்றும் தோழி அமைப்பின் திட்ட மேலாளர் சபிதாவிடம் இது குறித்துப் பேசியபோது..‘‘தீபக் ஜேக்கப் சார் பொறுப்பேற்றதில் இருந்தே, திருநங்கைகள் என்றால் பிச்சை எடுப்பவர்கள் அல்லது பாலியல் தொழில் செய்பவர்கள் என மக்கள் மனதில் பதிந்த அடையாளத்தை மாற்றும் விதமாக பல விசயங்களை முன்னெடுத்து வருகிறார். மாற்றுப் பாலினத்தவர் பொருளாதார ரீதியில் விடுதலை பெறுவதற்கான வழிகளை ஆராய்ந்து, அரசு மற்றும் தனியார் துறைகளின் உதவிகளோடு, இவர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதுதானே அரசின் கடமை. நீ பாலியல் தொழில் செய். ஆனால் பாதுகாப்பாகச் செய் என்கிற போதனை ஒருவர் வாழ்வில் என்னவிதமான மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்? அந்தவகையில், ஆணுறையைக் கையில் கொடுத்து, எச்.ஐ.வி.யில் இருந்து மாற்றுப் பாலினத்தை பாதுகாப்பது மட்டுமல்ல அவர் நோக்கம், கௌரவம் மிக்க பணிகளில் அமர்த்தி, வாழ்வாதாரத்துக்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்பதே அவரின் திட்டம்.எங்கள் அமைப்பு மூலமாக, பட்டப் படிப்பை முடித்தவர்களின் பட்டியலில் இருந்து முதல் 14 நபர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் உதவியுடன், 20 நாட்கள் பயிற்சி (skill training) முதலில் வழங்கப்பட்டது. ஒரு சில கார்ப்பரேட் நிறுவனங்களும் இதில் கைகோர்த்து அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை வழங்கினர். முக்கியமாக ஸ்போக்கன் இங்கிலீஷ், சிஸ்டம் நாலேஜ், பப்ளிக் பிகேவியர் போன்ற விசயங்களுக்கான பயிற்சிகளை வழங்கியதுடன், பெரிஃபெரி(Periferri) அமைப்பின் மூலம் சான்றிதழும் வழங்கப்பட்டது.தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் மெட்ரோ ஸ்டேஷன் பணிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோவுக்கு மேன்பவர் வழங்கும் கேசிசி நிறுவனம் மூலம் இவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டனர்.  இவர்களில் நால்வர் திருநம்பிகள், பத்து பேர் திருநங்கைகள்.முதல் பேட்ஜ் தயாரானதுமே, புதுவண்ணாரப்பேட்டை மெட்ரோ ஸ்டேஷன் முழுவதையும் மாற்றுப் பாலினத்தவரே நிர்வகிக்கும் முடிவை எங்களிடத்தில் தீபக் ஜேக்கப் சார் தெரிவித்தார். தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு பேட்ஜ்களை தயார் செய்யும் வேலைகளும், அதற்கான முன்னெடுப்புகளும் நடைபெற்று வருகிறது. அனைத்து பணியாளர்களோடு மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இவர்கள் இணைந்து பணி செய்வதற்கான திட்டங்களும் பரிசீலனையில் உள்ளது. கிடைத்த வாய்ப்பை நாங்கள் தவறவிடவில்லை. முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறோம். போகப் போக நிறைய மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கிறோம்’’ என புன்னகைத்து விடைபெற்றனர் இருவரும்.வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியில் இருக்கும் திருநங்கை வினித்ராவிடம் பேசியபோது, ‘‘என்னுடன் பணியாற்றும் மாற்றுப்பாலினத்தவர் அனைவருமே பட்டதாரிகள்தான். நான் லயோலா கல்லூரியில் எம்.ஏ. எக்னாமிக்ஸ் படித்திருக்கிறேன். இதற்கு முன்புவரை வருமானத்திற்காக கடை வசூல், பாலியல் தொழில்னு இருந்தவர்களை இந்த வாய்ப்பு முற்றிலுமாக மாற்றிக் காட்டியிருக்கிறது.நாங்கள் எங்களுக்கான அங்கீகாரத்தை அடைந்திருக்கிறோம் என்பதே இதில் விசயம். இது எங்களுக்கு வேற லெவல் ஃபீலிங். சொல்ல வார்த்தைகளே இல்லை. ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கு. இதற்கு முன்பு இந்த சமூகம் எங்களைப் பார்த்த பார்வையும், இப்போது பார்க்கும் பார்வையிலும் மாற்றம் தெரிகிறது. அணுகுமுறையிலும் வித்தியாசத்தை நாங்கள் பெரிதாக உணர்கிறோம். பயணிகள் பலரும் கை கொடுத்து எங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதோடு, எங்களோடு இணைந்து செல்ஃபி எடுக்கவும் முன் வருகிறார்கள். எங்களுக்கு டிக்கெட் ஆப்ரேட்டிங் சிஸ்டம், ப்ளாட்ஃபார்ம் மேனேஜ்மென்ட்,  பயணிகளை வழிநடத்துவது, பார்க்கிங், எமெர்ஜென்ஸி எக்ஸிட் குறித்தெல்லாம் பயிற்சி கொடுக்கப்பட்டது. ஒரு மெட்ரோ ஸ்டேஷனே இப்போது எங்கள் கையில் வழங்கப்பட்டு உள்ளது. எங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை நூறு சதவிகிதமும் நல்லவிதமாக பயன்படுத்தி, வரலாற்றில் பேசப்படக்கூடிய விசயமாக மாற்றிக் காட்டுவோம்.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் போலவே பல அரசு சார்ந்த நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் படிப்பிற்கு ஏற்ற வேலை வாய்ப்பை எங்களுக்கு வழங்க வேண்டும்’’ என முடித்தார்.சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினராலும் ஒதுக்கப்படும் ஓரினத்தை முன்னேற்றி, சீர்திருத்தி, கௌரவமாக வாழ்வதற்கு வழிவகை செய்வதே மாற்றுப் பாலினத்தவர்களுக்காக இயங்கும் அமைப்பின் அடிப்படை நோக்கமாக இருத்தல் வேண்டும். அதற்கான முன்னெடுப்போடு இவர்கள் முன்னேறிச் செல்வது மகிழ்ச்சியே.கண்ணை மூடி யோசித்தால்… பிறப்பும் இறப்பும் நம் கைகளில் இல்லைதான். பாலினம் தவறிய குழந்தை யார் வீட்டிலும் பிறக்கலாம். அது யார் குற்றம்? தன்னுடைய பாலினத்தை அடையாளப்படுத்தத்தானே இத்தனை போராட்டங்களும். அதற்காகத்தானே வீட்டைத் துறந்து, உறவைத் துறந்து, சொந்த பந்தங்களைத் துறந்து திசை தெரியாமல் ஓடி வருகிறார்கள்.மாற்றுப் பாலினத்தவர் குறித்த அறிவு இங்கு என்னவாக உள்ளது? அரசாங்கம் ஓரடி எடுத்து வைத்தால் சமூகம் இன்னொரு அடி எடுத்து வைக்கும் என்பதும் இதில் நிதர்சனம்.செய்தி: மகேஸ்வரி நாகராஜன்படங்கள்: ஆ.வின்சென்ட்பால்

Related posts

சருமத்தைப் பாதுகாக்கும் வால்நட் எண்ணெய்!

பாராலிம்பிக்ஸில் பதக்கங்களை வென்று குவித்த இந்திய வீராங்கனைகள்!

ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்!