சென்னை மாநகராட்சி சார்பில் சொத்து வரி செலுத்த பல்வேறு வசதிகள்; 30-ம் தேதிக்குள் செலுத்தி வட்டி விதிப்பினை தவிர்க்க வலியுறுத்தல்

சென்னை: சொத்து உரிமையாளர்கள் வரும் 30ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்தி வட்டி விதிப்பினை தவிர்க்க வேண்டும் என்றும், எளிய முறையில் சொத்து வரி செலுத்த பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ெதரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் வரி வருவாயில் சொத்து வரி முக்கிய வருவாயாக உள்ளது. ஆனால், ஏராளமானோர் லட்சக்கணக்கில் சொத்து வரி பாக்கி வைத்துள்ளதால், மாநகராட்சிக்கு வருவாய் பாதிப்பதுடன், மக்களுக்கான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, அதிக வரி பாக்கி வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி, அனைத்து மண்டலங்களிலும் வார்டு வாரியாக ஆய்வு நடத்தி, அதிக சொத்து வரி நிலுவையில் உள்ள கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளித்து வருகிறது. அதையும் மீறி வரி செலுத்தாதவர்களின் கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக சொத்து வரி பாக்கி உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி தயார் செய்து வருகிறது. இந்த பட்டியலின்படி நீண்ட நாட்களாக வரி செலுத்தாத சொத்து உரிமையாளர்களின் சொத்தினை சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டத்தின்படி ஜப்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி சமீப காலமாக அதிகாரிகள் தீவிர ஆய்வு நடத்தி, நீண்ட காலமாக வரி பாக்கி வைத்துள்ள கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு சீல் வைத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையின் காரணமாக சொத்து வரியினை நீண்ட நாட்களாக செலுத்தாத நிறுவனங்கள் சில தங்களது சொத்து வரி நிலுவையினை செலுத்தியுள்ளன. இந்நிலையில் சொத்து வரி பாக்கி வைத்துள்ளவர்கள் இந்த மாதம் 30ம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும், என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சொத்து உரிமையாளர்கள்  சொத்துவரி சீராய்வின்படி,  நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரி தொடர்பான, கணக்கீட்டு முறையை அறிய ஏதுவாக, ஏற்கனவே பெருநகர சென்னை மாநகராட்சியின் https://erp. chennaicorporation.gov.in/ptis/ citizen/revision NoticeOne!generate Report. action என்ற இணையதள இணைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சொத்துவரி எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் முதலிய விவரங்களை பதிவு செய்து கணக்கீட்டு விவரத்தினை அறிந்து கொள்ளலாம்.  தற்போது, சொத்துவரி பொது சீராய்வின்படி, குறிப்பிட்ட தெருவிற்கு சதுர அடி அடிப்படையில்,  நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரி விவரம் அறிய,  பெருநகர சென்னை மாநகராட்சியின் https://erp.chennaicorporation. gov.in/ ptis/ citizen/citizenCalc. action என்ற இணையதள இணைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள சொத்துவரி விவரத்தினை அறிந்து கொள்ளலாம். மேலும், சொத்துவரி பொது சீராய்வின்படி நிர்ணயிக்கப்பட்ட சொத்துவரி தொடர்பாக எழும் சந்தேகங்கள் மற்றும் கணக்கீட்டு விவரம் குறித்து தெளிவு பெற, பெருநகரசென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் தனி முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை கீழ்க்கண்ட வழிமுறைகளில் ஏதேனும் ஒரு முறையை பின்பற்றி செலுத்தலாம். சொத்து உரிமையாளர்கள் சொத்து வரியினை எளிதாக செலுத்தும் வகையில்,  சீராய்வு அறிவிப்புகளில் http://tinyurl.com/ மற்றும் Scan QR Code ஆகிய வழிமுறைகள் மற்றும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள், இணையதளம் (www.chennaicorporation.gov.in) செல்போன் செயலி மற்றும்  பெருநகர சென்னை மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள் மூலம் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. சொத்து வரி நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்களுக்கு, அவர்களின் கைபேசி எண்ணுக்கு, குறுஞ்செய்தி தகவலுடன் சொத்துவரி செலுத்த Payment Link அனுப்பப்படுகிறது. எனவே,  சொத்து உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியினை வரும் 30ம் தேதிக்குள் செலுத்தி, வட்டி விதிப்பினை தவிர்க்குமாறும், பெருநகர சென்னை மாநகராட்சி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்