Friday, September 6, 2024
Home » சென்னை மாநகராட்சியில் ₹430 கோடியில் 372 இடங்களில் 3720 அதிநவீன கழிவறை வசதிகள்:  டிசம்பருக்குள் பணிகள் முடிவடையும்  கன்ட்ரோல் ரூம் மூலம் கண்காணிப்பு

சென்னை மாநகராட்சியில் ₹430 கோடியில் 372 இடங்களில் 3720 அதிநவீன கழிவறை வசதிகள்:  டிசம்பருக்குள் பணிகள் முடிவடையும்  கன்ட்ரோல் ரூம் மூலம் கண்காணிப்பு

by Karthik Yash

* சிறப்பு செய்தி
சென்னை மாநகராட்சியானது, பொதுமக்களின் வசதிக்காக பல வசதிகளை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பும் உள்ளது. இந்நிலையில், தற்போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கழிவறைகளை நவீன முறையில் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே, சுகாதாரத்தில் முன்னிலையில் இருக்கும் சென்னை மாநகராட்சி, தற்போது கூடுதலாக வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்காக சென்னை மாநகராட்சி, தனியார் நிறுவனத்துடன் இணைந்து சென்னையில் கழிவறைகளை கட்டி, அதனை பராமரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. அதாவது, மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 4 கட்டங்களாக பணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மண்டலம் 5, 6 மற்றும் 9 மெரினா ஆகிய பகுதிகளிலும், இரண்டாவது கட்டமாக மண்டலம் 1, 2, 3, 4 ஆகிய பகுதிகளிலும், மூன்றாம் கட்டமாக மண்டலம் 7, 8, 9, 10 ஆகிய பகுதிகளிலும், நான்காவது கட்டமாக மண்டலம் 11, 12, 13, 14, 15 ஆகிய பகுதிகளிலும் அதிநவீன முறையில் கழிவறைகள் கட்ட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

முதற்கட்டமாக பணிகள் நடக்கும் 3 மண்டலங்களில் மொத்தம் 372 இடங்களில் 3270 கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவும் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ₹430 கோடி சென்னை மாநகராட்சியால் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, 9 ஆண்டுகள் அதாவது ஓராண்டு கட்டுமானத்திற்கும், 8 ஆண்டுகள் பராமரிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, கட்டுமானத்திற்காக 40 சதவீத நிதியும், பராமரிக்க 60 சதவீத நிதியும் அளிக்கப்பட உள்ளது. இந்த பணி சென்னை மாநகராட்சியின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் புதிதாக அதிநவீன முறையில் கழிவறைகள் கட்டி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், இதனை கணினி மயமாக்கப்பட்ட கண்ட்ரோல் ரூம் அமைப்பு மூலம் மேற்பார்வை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* விதிமுறைகள்
இந்த பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, அனைத்து கழிவறைகள், வாஷ் பேசன்கள் சுத்தமாக இருக்க வேண்டும். 24 மணி நேரமும் தண்ணீர் வசதி இருக்க வேண்டும். கழிவறை கதவுகள், தரைகள் போன்றவை எந்த சேதமும் இல்லாமல் எப்போதும் இருக்க வேண்டும். குழாயில் இருந்து தண்ணீர் ஒரு சொட்டு வீண் ஆகாமலும், கழிவுகள் நிரம்பி வெளியே வராமல் இருக்க வேண்டும். எல்லா கழிவறைகளிலும் கண்ணாடி சுத்தமாக இருக்க வேண்டும். சோப் மற்றும் கை கழுவுவதற்கான பொருட்கள் இருக்க வேண்டும். கால் துடைக்க துணி இருக்க வேண்டும்.

தேவையான ஊழியர்கள் இருக்க வேண்டும். எப்போதும் தூய்மை பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் சுழற்சி முறையில் இருக்க வேண்டும். பொதுமக்களுக்கு புரியும் வகையில் பொது கழிவறை இருக்க வேண்டும். புகார் தெரிவிக்க இடம் அமைக்க வேண்டும். சுவரின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்களில் சுவரொட்டி ஒட்டாமல் இருக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும். சானிட்டரிநாப்கின்கள் இருக்க வேண்டும். குப்பை தொட்டிகள் இருக்க வேண்டும். சிசிடிவி இருக்க வேண்டும் போன்ற 26 விதிமுறைகள் ஒப்பந்ததாரருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னையில் பொதுமக்களுக்கு வசதியாக, மாநகராட்சி சார்பில் இலவச அதிநவீன கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது கட்டப்பட்டு முடிக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் கட்டப்பட்டு வரும் கழிவறைகளை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தலாம். இதற்காக 9 ஆண்டுகள் தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு முகம் சுளிக்காத வகையில் பணிகள் இருக்கும். இந்த கழிவறைகளில் ஏதாவது சிறிய பிரச்னைகள் என்றால் கூட, அதாவது, குழாய் உடைந்திருந்தாலோ, கழிவறை உடைந்திருத்தல் போன்ற பிரச்னைகள் இருந்தால் ஒப்பந்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்படும்.

அந்த பிரச்னை சரிசெய்யும் வரை நாள் ஒன்றுக்கு ₹1000 முதல் 5000 வரை அபராதம் விதிக்கப்படும். அதேபோல், குறிப்பிட்ட கால நேரத்திற்குள் கழிவறைகள் கட்டப்படவில்லை என்றால் நாள் ஒன்றுக்கு ₹4000 அபராதம் விதிக்கப்படும். ஏற்கனவே குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிகளை முடிக்காத ஒப்பந்ததாரரிடம் ₹30 லட்சத்துக்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட இடங்களில் உள்ள மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் இந்தாண்டிற்குள் முடிவடையும்,’’ என்றனர்.

முதற்கட்ட பணிகள்
மண்டலம் 5, 6 மற்றும் 9 மெரினா ஆகிய பகுதிகளில் பணிகள் நடந்து வருகிறது.
வகைகள் மண்டலம் 5 மண்டலம் 6 மண்டலம் 9 (மெரினா) மொத்தம்
புதிய
கட்டுமானம் 51 இடங்களில் 365 கழிவறை 36 இடங்களில் 281 கழிவறை 3 இடங்களில் 16 கழிவறை 90 இடங்களில் 662 கழிவறை
பெரிய
மறுசீரமைப்பு 71 இடங்களில் 396 கழிவறை 17 இடங்களில் 46 கழிவறை — 88 இடங்களில் 442 கழிவறை
சிறிய
மறுசீரமைப்பு 105 இடங்களில் 1398 கழிவறை 81 இடங்களில் 661 கழிவறை 8 இடங்களில் 107 கழிவறை
மொத்தம் 227 இடங்களில் 2159 கழிவறை 134 இடங்களில் 998 கழிவறை 11 இடங்களில் 123 கழிவறை 372 இடங்களில் 3270 கழிவறை
முடிக்கப்பட்ட பணிகள்
சிறிய அளவு பணிகள் 28 இடங்களில் 358 கழிவறை 15 இடங்களில் 146 கழிவறை 1 இடத்தில் 6 கழிவறை 44 இடங்களில் 510 கழிவறை
பெரிய அளவு பணிகள் 50 இடங்களில் 702 கழிவறை 18 இடங்களில் 206 கழிவறை 5 இடங்களில் 95 கழிவறை 73 இடங்களில் 1003 கழிவறை
புதிய
கட்டுமானம் 2 இடத்தில்
39 கழிவறை 4 இடத்தில்
84 கழிவறை 6 இடங்களில் 123 கழிவறை 123 இடங்களில் 1635 கழிவறைகள்
மொத்தமுள்ள 3 மண்டலங்களில் 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. அதில் முதல் கட்டத்தில் 30% பணிகள் முடிக்கப்பட்டு 981 கழிவறைகள் கட்டுப்பட்டுள்ளது. 2ம் கட்டத்தில் 50% பணிகள் முடிக்கப்பட்டு 1635 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டத்தில் 70% பணிகள் அதாவது 2289 கழிவறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
தனியார் நிறுவனம் நிர்வகிக்கும் கழிவறைகள்
சிறிய அளவு பணிகள் 18 இடங்களில் 221 கழிவறை 14 இடங்களில் 136 கழிவறை 1 இடத்தில்
6 கழிவறை 33 இடங்களில் 363 கழிவறை
பெரிய அளவு பணிகள் 29 இடங்களில் 442 கழிவறை 12 இடங்களில் 160 கழிவறை 4 இடங்களில் 67 கழிவறை 45 இடங்களில் 669 கழிவறை
புதிய
கட்டுமானம் 1 இடத்தில்
28 கழிப்பறை 2 இடத்தில்
46 கழிவறை – 3 இடங்களில் 74 கழிவறை

You may also like

Leave a Comment

1 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi