சென்னை மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்: மக்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுவதை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அப்போது, மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். கலைஞரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி கடந்த 3ம் தேதி கலைஞரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கலைஞரின் பிறந்தநாளில் சென்னையில் மலர் கண்காட்சிக்கு அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி, கலைவாணர் அரங்கில் கடந்த 3ம் தேதி மலர் கண்காட்சி தொடங்கப்பட்டது. ஊட்டி, கொடைக்கானல், மைசூரு, ஏற்காடு, புனே, கிருஷ்ணகிரி போன்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வண்ண மலர்கள் சென்னை கலைவாணர் அரங்கத்தில் வைக்கப்பட்டது. குறிப்பாக ஆர்க்கிட், ஆந்துாரியம், துலிப் பூ உள்ளிட்ட பல அரியவகை பூக்கள் மற்றும் பூச்செடிகள் என 200க்கும் மேற்பட்ட வகைகளில் கண்ணை கவரும் மலர்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற்றது. இந்த கண்காட்சியில் மலர் அலங்காரங்கள், காய்கறியால் செதுக்கப்பட்ட உருவங்கள், செல்பி எடுப்பதற்கான பிரத்யேக இடங்கள் அமைக்கப்பட்டது. மேலும், மலர் வளைவுகள், மலர் தொட்டிகளில் வண்ண மலர்கள், மலர்களால் வடிவமைக்கப்பட்ட கோப்பை ஆகியவை நிறுவப்பட்டது. குதிரை, மயில், சிங்கம், கரடி ஆகியவைகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை மலர்க் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்தநிலையில், மூன்று நாள் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ரூ.8.35 லட்சம் வசூல் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இறுதி நாளான இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் கண்காட்சியை பார்வையிட்டார். ஞயிற்றுக்கிழமையான இன்று அதிக அளவிலான பார்வையாளர்கள் இன்று மலர்கண்காட்சியை பார்வையிட வந்திருந்தனர். அவர்கள் முதல்வரை கண்டதும் ஆர்வமுடம் வரவேற்று செல்பி எடுத்துக்கொண்டனர். மேலும், மலர் கண்காட்சி குறித்து பொதுமக்களிடம் முதல்வர் கருத்துகளை கேட்டறிந்தார்….

Related posts

மெரினா கடற்கரை அழகுபடுத்தும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எத்தனை கடைகள்?.. மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

குடியிருப்பில் நள்ளிரவு தீவிபத்து உடல் கருகி 2 குழந்தைகள் பலி: ஆபத்தான நிலையில் பெற்றோருக்கு சிகிச்சை

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலகம், ஏர் கார்கோவில் மது, சிகரெட், குட்கா உபயோகிக்க தடை: சுங்கத்துறை ஆணையர் எச்சரிக்கை