சென்னை மற்றும் புறநகர் பகுதி கடைகளுக்கு குட்கா சப்ளை செய்த ராஜஸ்தான் வாலிபர்கள் கைது: 430 கிலோ, 3 கார்கள் பறிமுதல்

 

பூந்தமல்லி: மதுரவாயல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், வானகரம் பகுதியில் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை செய்தபோது, 2 கார்களிலும் வந்த 3 பேர் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து, அந்த கார்களில் சோதனை செய்தனர். அதில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

விசாரணையில், பிடிபட்ட நபர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தினேஷ்குமார் (28), பஜன்லால் (24), பரசுராம் (28), என்பதும் வெளி மாநிலங்களில் இருந்து குட்காவை கடத்தி வந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து 2 கார்கள், 30 கிலோ குட்கா மற்றும் ரூ.3.50 லட்சம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, இதே வானகரம் பகுதியில் போலீசார் சோதனையின் போது காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 400 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

அப்போது போலீசாரிடம் இருந்து தப்பியோடிய நபர்களை தேடி வந்தனர். அந்த சம்பவத்தில் ஈடுபட்டதும் இவர்கள்தான் என்பதும் தெரியவந்தது. 400 கிலோ குட்கா உடன் காரை விட்டு தப்பிச்சென்ற நிலையில் மீண்டும் 2வது முறையாக கார்களில் குட்காவை எடுத்து வந்தபோது போலீசாரிடம் சிக்கிக் கொண்டது தெரியவந்தது. இந்த 2 சம்பவங்களிலும் சேர்த்து மொத்தம் 430 கிலோ குட்கா, 3 கார்கள், மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 3 பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்