சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு முற்றிலும் நிறுத்தம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

குன்றத்தூர், டிச.28: சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்குகிறது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் பெய்த மழை மற்றும் கடந்த 4ம்தேதி வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்த கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு, தொடர்ந்து நீர்வரத்து அதிகதித்து வந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி, கடந்த அக்டோபர் மாதம் 8ம்தேதி முதல் ஏரியிலிருந்து 100கன அடியும், பின்னர் படிப்படியாக 12,000 கனஅடி வரை உயர்த்தப்பட்டு உபரிநீர் திறந்து விடப்பட்டது.

மேலும், மழை விட்டபோதிலும், தொடர்ந்து ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வந்ததால், ஏரிக்கு உபரிநீர் திறந்து விடுவதும் கடந்த இரண்டரை மாதங்களாக நீடித்து வந்தது. பின்னர், ஏரிக்கு வரும் உபரிநீரின் அளவும் படிப்படியாக குறைய தொடங்கியது. இதனால், கடந்த இரண்டரை மாதங்களுக்கு பிறகு தற்போது ஏரிக்கு வரும் நீர்வரத்து குறைந்ததால், சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, தற்போது ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டது. எந்த வருடமும் இல்லாமல் இந்த ஆண்டுதான் தொடர்ந்து இரண்டரை மாதங்கள் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டது இதுவே முதல் முறை.

தற்போது, ஏரியின் நீர்மட்டம் உயரம் 22.24 அடியும், மொத்த கொள்ளளவு 3,182 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 56 கன அடியாக உள்ளது. தொடர்ந்து ஏரியின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இந்த ஆண்டு பெய்த மழையால் தற்போது செம்பரம்பாக்கம் ஏரி, சிக்கராயபுரம் கல்குவாரியில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இந்த கோடை காலத்தில் சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை