சென்னை புறநகரில் மழை வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: தண்டவாளத்தில் தண்ணீர் புகுந்ததால் ரயில் சேவை முடங்கியது

ஆவடி: சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தொடர் மழையால் முக்கிய சாலைகள், தெருக்களில் மழைநீர் ஆறாக ஓடியது. மேலும், வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. இதோடு மட்டுமல்லாமல், ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் ஆறாக ஓடியதால் ரயில் சேவை முடங்கியது.   காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் மதியம் முதல்  காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக முக்கிய நெடுஞ்சாலைகள், பிரதான சாலைகள், தெருக்களில் மழைநீர் ஆறாக ஓடியது இதனால், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். மேலும், வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நின்றது. இதோடு மட்டுமல்லாமல், பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக சென்னை புறநகர் பகுதியான ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஸ்ரீராம் நகர், வசந்தம் நகர், பருத்திப்பட்டு- அம்பேத்கர் தெரு, கோயில்பதாகை, கலைஞர் நகர், கன்னடபாளையம், பிருந்தாவன் நகர் விரிவு, திருமுல்லைவாயல் பகுதியான சரஸ்வதி நகர், தென்றல் நகர், இந்திரா நகர், கணபதி நகர், தாமரை நகர், ஜெயலட்சுமி நகர், மூன்று நகர், பட்டாபிராம் பகுதியான மேற்கு, கிழக்கு கோபாலபுரம், தென்றல் நகர், முல்லை நகர், குறிஞ்சி மாநகர், திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர், முத்தமிழ் நகர், பெரியார் நகர், சுதேசி நகர், கன்னிகாபுரம், மற்றும் அம்பத்தூர் பகுதியான வெங்கடேஸ்வரா நகர் விரிவு, கருக்கு டி.டி.பி காலனி, மேனாம்பேடு, இந்தியன் வங்கி காலனி, கல்யாணபுரம், கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சென்ட்ரல் அவன்யூ, வனசக்தி நகர் சிவலிங்கபுரம், டிவிஎஸ் நகர், அக்ரகாரம், லேக் வியூ கார்டன், அன்னை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது.  மேலும், பல தெருக்களில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது. மேற்கண்ட பகுதியில் பல இடங்களில் வீடுகளை மழை நீர் சூழ்ந்து நின்றது மேலும் சில இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர். மேலும், தேங்கிய தண்ணீரில் பாம்பு, பூரான், தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் படையெடுத்து வந்தன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். மேலும், அத்தியாவசிய தேவை கூட பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.   இதோடு மட்டுமல்லாமல், அம்பத்தூர், அம்பத்தூர்  தொழிற்பேட்டை, கொரட்டூர், ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேலும் அம்பத்தூர் -சோழம்பேடு சாலை,  ஆவடி -பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆவடி- கோயில்பதாகை நெடுஞ்சாலை, பாடி- திருநின்றவூர் சி.டி.எச் சாலை, அம்பத்தூர் தொழிற்பேட்டை பிரதான சாலை, ஆவின் பால்பண்ணை சாலை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் ஆறாக ஓடியது. இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், அவசர தேவைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வண்டிகளும் அவதிப்பட்டு சென்று வந்தன.   இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை உள்ள பள்ளத்தில் கீழே விழுந்து சென்று வருகின்றனர். மேற்கண்ட ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி, பேரூராட்சி அதிகாரிகள் இரவு பகல் பாராது போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர். சாலை மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள மழை நீரை டீசல் மோட்டார்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர். வேரோடு சாய்ந்த மரங்களை இயந்திரம் மூலம் வெட்டி எடுத்து அப்புறப்படுத்தினர். மேற்கண்ட பணிகளை ஆவடி தொகுதி எம்எல்ஏவும், பால்வளத் துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர், அம்பத்தூர் தொகுதி எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் ஆகியோர் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் ஆவடி, அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர் காவல் நிலையங்களுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் காவல் நிலைய பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதோடு மட்டுமல்லாமல், ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், அம்பத்தூர், பட்டரைவாக்கம் ஆகிய இடங்களில் ரயில் தண்டவாளங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நின்றன. இதனால், சென்னை – அரக்கோணம் மார்க்கத்தில் பாதிக்கு மேற்பட்ட மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும், எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு கால தாமதமாக சென்று வந்தன. இதனால் ரயில் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்