சென்னை கிண்டி கிங் வளாகத்தில் முதியோர் மருத்துவமனை கட்டிட உறுதித்தன்மை ஆராய 3 பேர் குழு: ஐஐடி பேராசிரியர் தலைமையில் அமைப்பு; அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: சென்னை கிண்டி கிங் வளாகத்தில் முதியோர் மருத்துவமனை கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஐஐடி பேராசிரியர் தலைமையில் 3 பேர் கொண்ட ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவிடம் இருந்து ஆய்வு அறிக்கை பெறப்பட்டதும் முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலங்களில் வெள்ளநீர் சூழ்ந்து பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, மடுவன்கரையில் வெள்ள நீர் சூழ்ந்து, மழைநீர் வடிய தாமதம் ஏற்படுகிறது. எனவே மடுவன்கரை பகுதியில் மழை காலங்களில் தேங்கும் நீரினை எம்.கே.என். சாலை வடக்கு வழியாக, ஜிஎஸ்டி சாலையை கடந்து அடையாற்றினை அடையும் வகையில் அகலமான மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய்தார். அதேபோன்று கிண்டி கத்திப்பாரா பகுதியில் சாலையின் இடதுபுறம் உள்ள ஹாப்லிஸ் ஓட்டல் அருகே மழைநீர் தேங்கி போக்குவரத்து தடைபடுகிறது. இம்மாதிரி தண்ணீர் தேங்குவதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதனை போக்கும் வகையில் நிரந்தர வெள்ள தடுப்பு திட்டத்தின் கீழ் ரூ.70 லட்சம் மதிப்பில் 2 மீட்டர் அகலமும், 1.5 மீட்டர் உயரமும் உள்ள வார்க்கப்பட்ட கான்கிரீட் பிளாக்குகள் மூலம், பாலம் அமைக்கப்படுகிறது.மேலும், ஜவஹர்லால் நேரு சாலையில் (ஈக்காட்டுத்தாங்கல்) அம்பாள் நகர் பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்திற்கு கடந்த 2021 நவம்பர் மாதத்தில் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.  இதனை போக்க நிரந்தர தீர்வாக அம்பாள் நகர் முதல் அடையாறு பாலம் வரை பழைய செங்கல் வளைவு வடிகாலுக்கு பதிலாக பெரிய புதிய கான்கிரீட் வடிகால் அமைக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 400 மீட்டர் நீளத்திற்கு ரூ.3 கோடி மதிப்பில் பணி ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் ஆகஸ்ட் 2022 மாதத்திற்குள் முடிக்கப்படுகிறது. இந்த பணிகளையும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, மண்டல குழு தலைவர் துரைராஜ் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு பருவமழையின் போது ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதியில் ஆய்வு செய்தோம்.  அம்பாள் நகர் பகுதியில் தேங்கும் தண்ணீரை அகற்றும் வகையில் 400 மீட்டர் நீளத்தில் ரூ.3 கோடி  மதிப்பீட்டில் வடிகால் கட்டப்பட்டு மழைநீர் சூழாத நிலையை உருவாக்கியுள்ளோம். சென்னை கிண்டி மடுவன்கரை பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான பணிகளை பார்வையிட்டோம்.  சென்னை கிண்டி மடுவன்கரை, ஆலந்தூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் திட்ட மதிப்பீடு தயார் செய்து பணிகள் மேற்கொள்ளப்படும். அடுத்த மழையில் சென்னையில் மழைநீர் தேங்க கூடாது என்ற ஆலோசனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். அதன்படி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கிண்டி கிங் மருத்துவமனை வளாகத்தில் ஒன்றிய அரசின் நிதியுடன் கட்டப்பட்ட முதியோர் மருத்துவமனை கொரோனா காலத்தில் கொரோனா மருத்துவமனையாக பயன்பட்டு வந்தது. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எடுத்த நடவடிக்கையால் கொரோனா இல்லாத நிலை உருவாகி உள்ளது. இதனால் மருத்துவமனை முதியோர் மருத்துவமனையாக மாற்றப்படும். இந்த மருத்துவமனை கட்டிடம் உறுதி தன்மையுடன் உள்ளதா என்பதை பொதுப்பணித்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ள சென்னை ஐஐடி பேராசிரியர் மனு சந்தானம் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்கிறது. இந்த ஆய்வு அறிக்கை பெறப்பட்டதும் முதல்வரின் அறிவுறுத்தல் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை