சென்னை ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து அதிமுக அலுவலகத்துக்கு வைத்த ‘சீல்’ அகற்றம்: ஜெயலலிதாவின் பரிசு பொருட்கள் மாயம்; அலங்கோலமாக காட்சியளித்த கட்சி அலுவலகம்

சென்னை: ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல் காரணமாக அதிமுக தலைமை அலுவலகம் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. சென்னை ஐகோர்ட் உத்தரவையடுத்து நேற்று சீல் அகற்றப்பட்டது. கட்சி அலுவலகத்திற்குள் இருந்த, ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட வெள்ளி செங்கோல், மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மாயமாகி உள்ளது. மேலும், கட்சி அலுவலகத்தில் பொருட்கள் உடைக்கப்பட்டும், ஆவணங்கள் சிதறியும், பிரோக்கள் கவிழ்க்கப்பட்டு இருந்ததை காண முடிந்தது. ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் என அதிமுக இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளது. இந்தநிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களோடு வந்து சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைலைமை அலுவலகத்தை கைப்பற்றினார். அப்போது ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 45க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். மேலும் ஏராளமான வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கலவரத்தை தணிக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகள் 145வது சட்டப்பிரிவை பயன்படுத்தி அதிமுக அலுவலகத்தை ‘சீல்’ வைத்து பூட்டினர். மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன்ராம் கட்டுப்பாட்டில் கட்சி அலுவலகம் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவத்தால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்ற வேண்டும் என்று, ஓபிஎஸ் – இபிஎஸ் ஆகியோர் சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்கள் தரப்பு வாதங்களை இருவரும் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஸ்குமார் முன்னிலையில் தெரிவித்தனர். மேலும் காவல்துறை சார்பாக அதிமுக அலுவலகம் தொடர்பாக அறிக்கையும் சமர்பித்தனர். இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி சதீஸ்குமார் தீர்ப்பு வழங்கினார். அதில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டார். மேலும் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக அலுவலக சாவியை ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஒரு மாத காலத்திற்கு தொண்டர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்ககூடாது எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சி.வி.சண்முகம் எம்பி, அலுவலக மேலாளர் மகாலிங்கம் ஆகியோர் நேற்று காலை 10.45 மணியளவில் வருகை தந்தனர். மயிலாப்பூர் வட்டாட்சியர் ஜெகஜீவன்ராம் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் காலை 10.55 மணியளவில் வந்தனர். அவர்கள் வந்ததும் சீலை அகற்றும் நடவடிக்கைகள் தொடங்கின. அதிமுக கட்சி அலுவலகத்தின் வெளி நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருந்த சீல் முதலில் அகற்றப்பட்டு கதவு திறக்கப்பட்டது. பின்னர் உள் நுழைவுவாயில், பின் நுழைவுவாயில், அலுவலக மேலாளர் அறை ஆகிய இடங்களில் வைக்கப்பட்ட சீல்கள் அடுத்தடுத்து அகற்றப்பட்டு திறக்கப்பட்டன. சீல் அகற்றும் பணிகள் முடிந்ததும், அலுவலக சாவியை அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் வழங்கி அதற்கான ஆவணங்களில் அதிகாரிகள் கையொப்பம் பெற்றனர். ‘சீல்’ அகற்றும் நடைமுறைகள் முடிவடைந்ததும் காலை 11.20 மணியளவில் அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.இதையடுத்து முன்னாள் அமைச்சர் சிவிசண்முகம், மகாலிங்கம் ஆகியோர் பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டு அதிமுக அலுவலகத்தின் ஒவ்வொரு அறையையும் பார்வையிட்டனர். அப்போது கம்ப்யூட்டர் அறை, அக்கவுண்ட் அறை கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. அந்த அறைகளில் இருந்த ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் சிதறி கிடந்தன. பீரோ கதவுகள் கடப்பாரையால் உடைக்கப்பட்டு புரட்டி போடப்பட்டிருந்தன. பிளாஸ்டிக் நாற்காலிகள் சுக்கு நூறாக உடைக்கப்பட்டிருந்தன. கூட்ட அரங்கத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் பெயர் பட்டியல் குப்பை போன்று சிதறி கிடந்தது. கட்சி அலுவலகமே சின்னாபின்னமாக காட்சி அளித்தன. இதைத்தொடர்ந்து கட்சி அலுவலகத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கின.பின்னர் அலுவலக மேலாளர் மகாலிங்கம் கூறும்போது, ‘அதிமுகவினர் கோயிலாக நினைத்து பாவித்த கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது மனதுக்கு வேதனையாக உள்ளது. எப்படி இருந்த கட்சி அலுவலகம் இன்றைக்கு இப்படி சின்னாப்பின்னமாகி உள்ளது. கட்சி அலுவலகத்தின் 2வது மாடியில் உள்ள அறையில் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட வெள்ளி செங்கோல், வெள்ளி வேல் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் மாயமாகி உள்ளது. என்னென்ன பொருட்கள், ஆவணங்கள் மாயமாகி இருக்கிறது என்ற பட்டியலை எடப்பாடி பழனிசாமி விரைவில் வெளியிடுவார்’ என்றார். கடந்த 10 நாட்களாக மூடப்பட்டு கிடந்த கட்சி தலைமை அலுவலகம் நேற்று திறக்கப்பட்டு, எடப்பாடி அணியினரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்