சென்னை அமெரிக்க மையத்தில் இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி: துணை தூதர் தகவல்

சென்னை: கோவிட் காரணமாக மூடப்பட்டிருந்த அமெரிக்க மையத்துக்கு வர பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதிக்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின் கூறுகையில், “பொதுமக்களை மீண்டும் அமெரிக்க மையத்துக்கு வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இடையில் சிறிது காலம் நாம் சந்திக்க இயலவில்லை. சென்னை மாநகரத்தின் மிக முக்கியமான இடங்களில் ஒன்றான அமெரிக்க மையம் கடந்த 74 ஆண்டுகளுக்கும் மேலாக வருகையாளர்களை வரவேற்றுள்ளது. சுமார் 16,000 புத்தகங்கள், மற்றும் ஏராளமான டிவிடிக்களைப் பார்க்கவோ, எங்கள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ, அல்லது அமெரிக்க உயர் கல்வியைப் பற்றி விசாரிக்கவோ வரும் உங்களைக் காண நாங்கள் மிகவும் ஆவலாக உள்ளோம்.” என்று குறிப்பிட்டார்.  முன்னதாக, கோவிட் தொற்று காரணமாக மார்ச் 2020 முதல் மூடப்பட்டிருந்த சென்னை அமெரிக்க மையம்  இன்று முதல் (மார்ச் 7) மீண்டும் திறக்கப்படுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும். தெற்காசியாவிலேயே சென்னை அமெரிக்க மையம்தான் அமெரிக்க ஆய்வுகள் குறித்த மிக அதிக தகவல்களை சேகரித்து வைத்துள்ளது. முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட 15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய வருகையாளர்கள் நேர முன் பதிவு செய்துகொண்டு அமெரிக்க மையத்திற்கு வரலாம். மையத்தின் செயல்பாடுகள் மற்றும் நிகழ்ச்சிகள் பற்றி முகநூல், டிவிட்டர், மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாகத் தெரிந்துகொள்ளலாம். வருகையாளர்கள் https://in.usembassy.gov/education-culture/american-spaces/american-space-chennai/ என்ற இணையதளத்துக்கு சென்று அங்குள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து நேர முன்பதிவு செய்துகொள்ளலாம். அமெரிக்க மையம் ஒரு மணி நேரத்துக்கு பத்து பேர்களை மட்டுமே அனுமதிக்கும். வருகையாளர்கள் இணையதளத்தில் கிடைக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான சான்றிதழைப் பூர்த்தி செய்து, அதன் காகிதப் பிரதி அல்லது மென்பிரதியை கொண்டு வர வேண்டியது அவசியம். அமெரிக்க மையத்திற்கு வருகை தரும் அனைத்து வருகையாளர்களும் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைபிடித்து தூதரகத்தின் கதீட்ரல் சாலை நுழைவாயிலில் தங்களுடைய ஏதாவது ஒரு அசல் புகைப்பட அடையாள அட்டையைக் காட்டவேண்டும். வளாகத்திற்குள் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். தூதரகத்தின் பாதுகாப்பு கவுன்டரில் செல்போன்கள் மட்டுமே வாங்கி வைத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை