சென்னையில் 75 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு 5 சதவீதத்திற்கு கீழ் குறைந்தது: காய்ச்சல் கணக்கெடுப்பு, தொடர் கண்காணிப்பினால் சாத்தியமானது; பரவலைக் குறைப்பது, தனிமைப்படுத்தலில் மாநகராட்சி தீவிரம்

சென்னை: கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, சென்னையில் கடந்த 8ம் தேதி புதிய பாதிப்பு 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்தது. காய்ச்சல் கணக்கெடுப்பு ஊழியர்கள் வீட்டுக்கு, வீடு சென்று பரிசோதனை நடத்துதல், தனியார் மருத்துவமனைகள், ஸ்கேன் சென்டர்கள், மருந்தகங்களை கண்காணிப்பது போன்ற பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, சென்னையில் நேற்று முன்தினம் பாதிப்பு விகிதம் 5%யை விடக் குறைந்தது. 32,168 சோதனைகள் செய்யப்பட்டதில் 1,345 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து பாதிப்பு 4.2% ஆக இருந்தது. கடைசியாக டிபிஆர் 5% க்கும் குறைவாக இருந்தது 75 நாட்களுக்கு முன்பு அதாவது மார்ச் கடைசி வாரத்தில். சென்னையில் ஒரு நாளைக்கு 700 முதல் 900 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாவதாக பதிவாகியுள்ளது. ஆனால் அப்போது மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் எண்ணிக்கை 15 ஆயிரமாக இருந்தது.ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இருந்து, சென்னை மாநகராட்சி படிப்படியாக சோதனைகளை அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து, டிபிஆர் 20%யை தாண்டியது. மே இரண்டாவது வாரத்தில் இருந்து, தினசரி மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் தொடர்ந்து 30,000யைத் தாண்டின. சென்னையில் பெரும்பாலான சோதனைகள் மாநகராட்சியால் செய்யப்படுகின்றன. தனியார் ஆய்வகங்களில் சிறிய அளவில் மட்டுமே சோதனை செய்யப்படுகின்றன. உதாரணமாக கடந்த புதன்கிழமை 32,168 மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதில், 25,492 மாதிரிகள் மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தோராயமாக 80% ஆகும்.இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது: கோவிட் அறிகுறிகள் உள்ள எவரும் சோதிக்கப்படாமல் அல்லது தனிமைப்படுத்தப்படாமல் இருக்க நாங்கள் விரும்பவில்லை. தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக, காய்ச்சல் கணக்கெடுப்பு ஊழியர்கள் வீட்டுக்கு வீடு சென்று பரிசோதனை செய்கின்றனர். மேலும் தனியார் மருத்துவமனைகள், ஸ்கேன் சென்டர்கள், மருந்தகங்களை கண்காணிப்பது போன்ற பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் காரணமாக புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையை குறைக்க உதவியது. பரவலைக் குறைப்பது மற்றும் நோயாளிகளின் தனிமைப்படுத்தலை விரைவாக உறுதி செய்வதில், மாநகராட்சி தீவிரமாக உள்ளது. மேலும் முந்தைய இரவில் எடுக்கப்படும் சோதனையில் பாசிட்டிவ் ரிசல்ட் கிடைக்கப்பெற்றால், அதற்கான உறுதி முடிவுகளைப் பற்றி எங்களுக்குத் தெரிவிக்கும்படி, நாங்கள் தனியார் ஆய்வகங்களை கண்டிப்பாகக் கேட்டுள்ளோம். இதனால் மறுநாள் அதிகாலையில் எங்கள் ஊழியர்கள் நோயாளியின் வீட்டு வாசலில் இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் துணை இயக்குநர் பிரப்தீப் கவுர் கூறுகையில், ‘கொரோனா நோயாளிகள் மற்றும் ஐஎல்ஐ அறிகுறிகள் உள்ள அனைத்து நபர்களின் தொடர்புகள் உட்பட சில வகை மக்களை சோதிப்பதில் எந்தவிதமான தளர்வும் இருக்கக்கூடாது’ என்றார்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்