சென்னையில் விடியவிடிய கொட்டி தீர்த்த கனமழை பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை

* சிறு மழைக்கே தாக்குபிடிக்காத தி.நகரில் சிறிதளவு கூட தண்ணீரை பார்க்க முடியவில்லை* சுரங்கப்பாதைகளில் பாதிப்பு இல்லை * தமிழக அரசின் நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டுசென்னை: சென்னையில் விடியவிடிய மழை கொட்டி தீர்த்த போதிலும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. சிறிய மழைக்கே தாக்குப்பிடிக்காத தி.நகரில் சிறிதளவு கூட மழை தண்ணீரை பார்க்க முடியவில்லை. தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் காலை முதல் வெயிலை காண முடியாத அளவுக்கு மழை பெய்வதற்கான கிளைமேட்டுடன் காணப்பட்டது. மாலை 5.40 மணி முதல் தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது.  விடியவிடிய கனமழை தொடர்ந்து பெய்தது. அதிகாலை 5 மணி வரைக்கும் சென்னையில் விடாமல் கனமழை பெய்தது. சென்னையில் அதிகபட்சமாக செங்குன்றத்தில் 13 செ.மீ., மழை வெளுத்து வாங்கியுள்ளது.  அடுத்தபடியாக பெரம்பூரில் 12 செ.மீ., மழை பெய்துள்ளது. அதே போல  சென்னை கலெக்டர் அலுவலகம், தண்டையார்பேட்டை வில்லிவாக்கத்தில் தலா 10 செ.மீ., அயனாவரத்தில் 9 செ.மீ., எம்ஜிஆர் நகர், டிஜிபி ஆபிஸ், நந்தனத்தில் 6 செ.மீ., மழையும் கொட்டி தீர்த்தது. இந்த கனமழைக்கு பின்பாக சென்னையில் பல இடங்களில் நேற்று காலையில் வெள்ளம் ஏற்பட்டு இருக்கும் என்றே மக்கள் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் சென்னையில் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் ஏற்படவில்லை. மழைநீர் தேங்கவும் இல்லை. சில மணி நேரத்துக்குள்ளாக மழைநீர் வடிந்து மக்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. குறிப்பாக கத்திப்பாரா பாலம், கேகே நகர், ஓஎம்ஆர் சாலையில் சில பகுதிகள் தவிர பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்படவில்லை. இந்த பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் கால்வாய் திட்டம் முழுமையாக முடியவில்லை என்பதால் அங்கு மட்டும் வெள்ளம் ஏற்பட்டது. மற்ற சாலைகளில் காலையில் பொழுது விடிவதற்குள் வெள்ளம் வடிந்துள்ளது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு, ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர், எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. இங்கெல்லாம் வெள்ளம் அதிகாலையில் சட்டென வடிந்துள்ளது. மக்களும் இங்கே எளிமையாக பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.  சென்னையை பொறுத்தவரை ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக மழை பெய்தாலே சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கும். ஆனால், சென்னையில் நேற்று முன்தினம் கொட்டி தீர்த்த மழையால் இரவில் மட்டும் தான் சிறிதளவு தண்ணீர் தேங்கியது. ஆனால், காலையில் எங்கும் மழை தண்ணீர் வடிந்த நிலையை காண முடிந்தது. ஒரு சில இடங்களில் மட்டும் தான் சிறிதளவு தண்ணீர் தேங்கியது. அந்த தண்ணீரையும் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. புரட்டி போட்ட மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு மழை வெள்ளத்தில் சிக்கி தவித்த பகுதிகளில் தற்போது மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதால், அந்த பகுதிகளில் அவ்வளவு  மழை பெய்த போதும் தண்ணீர் தேங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதே போன்று சென்னையில் உள்ள அனைத்து சுரங்கபாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை. அந்த பகுதிகளில் வாகன போக்குவரத்தும் எந்தவித தடங்கலும் இல்லாமல் நடைபெற்றது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து சுரங்கபாதையிலும் ராட்சத மோட்டார்கள் வைத்து தண்ணீர் அகற்றியதே இந்த நடவடிக்கை காரணமாக இருந்தது. மொத்தத்தில் சென்னையில் மழைநீர் தேங்காததற்கு முக்கிய காரணமாக மழைநீர் வடிகால் பணிகளை அரசு தூரிதப்படுத்தியதே காரணம் என்று கூறப்படுகிறது. அந்த வேகத்தில் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு முடுக்கி விட்டதன் பலனாக சென்னையில் தண்ணீர் தேங்காததற்கு காரணம் என்று சென்னைவாசிகள் பெருமையுடன் கூறி வருகின்றனர்.* போர்க்கால அடிப்படையில் பணிகள் முதல்வருக்கு பொதுமக்கள் பாராட்டுசென்னை முழுவதும் முதற்கட்டமாக வடிகால் தூர் வாரும் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கால்வாய்கள் கண்டறியும் பணிகளும் நடைபெற்றது. பின்னர் சென்னையில் உள்ள அனைத்து வடிகால் வாய்களும் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக தூர்வாரப்பட்டது. அதேபோல் அனைத்து தெருக்களிலிருந்த கால்வாய்களும் ஆழப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்பட்டது. இந்த பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலினே நேரடியாகச் சென்று அடிக்கடி ஆய்வு செய்து வந்தார். இப்படி முதலமைச்சரின் மேற்பார்வையில் போர்க்கால அடிப்படையில் இந்த பணிகள் விரைந்து நடைபெற்றதால் தான் தற்போது பெய்து வரும் கனமழை தொடர்ந்தாலும், பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்காமல் உள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.* 5 இடங்களில் மரம் விழுந்தது உடனே அகற்றிய ஊழியர்கள்சென்னையில் நேற்று முன்தினம் மாலையில் இருந்து கனமழை பெய்தது. தொடர்ந்து கன மழை பெய்ததால் 5 இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. தி.நகர் கோட்ஸ்ரோடு, 184-வது வார்டு சரவணன் நகர், ராமச்சந்திரன் தெருவில் உள்ள மரம், நங்கநல்லூரில் 165வது வார்டு, 174வது வார்டில் கற்பகம் கார்டன், 192வது வார்டில் ராஜா நகர் ஆகிய இடங்களில் மரங்களும், கிளைகளும் முறிந்து விழுந்தன. அவற்றை விடியவிடிய மாநகராட்சி ஊழியர்கள் இயந்திரம் மூலம் வெட்டி அப்புறப்படுத்தினர். மேலும் மழை நீர் தேங்கினாலோ, வெள்ளம் புகுந்தாலோ, மரம் மற்றும் கிளைகள் முறிந்து விழுந்தாலோ மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால் அவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.* மழைநீர் தேங்காத பசுல்லா சாலைசிறிய மழை பெய்தாலே சென்னையில் வர்த்தக பகுதியான தி.நகர், பாண்டி பஜார், பசுல்லா சாலை கடுமையாக பாதிக்கப்படுவது வழக்கம். முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்குவது வழக்கம். அந்த பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை  வீட்டே வெளியேற முடியாத நிலை இருப்பது வழக்கம். தற்போது மழைநீர் வடிகால் பணிகள் அங்கு வேகமாக நடைபெற்றது. இறுதி கட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்ததது. இதனால் மழைநீர் வடிகாலில் தேங்கிய மழை நீரை வெளியேற்றி பணிகள் முழு அளவில் வேகமாக முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக சிறிதளவு கூட மழைநீரை காண முடியாத நிலை காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்