சென்னையில் மே 15ம் தேதி ஊராட்சி செயலாளர்கள் காத்திருப்பு போராட்டம்: சங்க மாநில தலைவர் தகவல்

 

ஆற்காடு, மே1: கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மே 15ல் ஊராட்சி செயலாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக மாநில தலைவர் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் நேற்று தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் நிருபர்களிடம் கூறியதாவது: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் ஆணிவேராம் ஊராட்சி செயலாளர்களின் நெடுநாள் கோரிக்கைகளை நிறைவேற்றி தர கேட்டு அமைச்சர்களையும், அரசின் உயர் அலுவலர்களையும் சந்தித்து முறையிட்டதன் விளைவாக கடந்த 2022ம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஊராட்சிகள் சட்டப்பிரிவு 104, 106 ஆகியவற்றில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு 31.1.2022 அன்று அரசிதழிலும் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து 2022 ஜூன் மாதம் 6ம் தேதி ஊராட்சி செயலாளர்களை ஊராட்சி மன்ற தலைவர்கள் நியமனம் செய்யும் அதிகாரத்தை மாற்றி அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால் இதுநாள் வரை அதற்குரிய பணி விதிகள் அரசாணை வெளியிடப்படவில்லை. மாநிலம் முழுவதும் காலியிடங்கள் அதிகமாக உள்ளன. நீதிமன்றத்திலும் இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது. ஊராட்சி செயலாளர்கள் காலி பணியிடங்களை நிரப்ப இயலாமல் தற்போது பணிபுரிந்து வருபவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை உள்ளது. இது பணியாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்த நிலையையும், பணி நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.

எனவே, ஊராட்சி செயலாளர்கள் காலியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புதல், ஊராட்சி செயலர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாறுதல் வழங்குதல், ஊராட்சி செயலாளர்களுக்கு மாத ஊதியத்தை அரசு கருவூலத்தில் வழங்குதல், ஊராட்சி செயலாளர்களுக்கு பிற அரசு பணியாளர்களுக்குரிய சலுகைகள் வழங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஊராட்சி செயலாளர்களின் பணி விதிகள் அரசாணையை வெளியிட கேட்டு வரும் மே 15 ம் தேதி காலை 10 மணி முதல் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பாக 600க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் உட்பட 5000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொள்ளும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது சங்கத்தின் ராணிப்பேட்ைட மாவட்ட தலைவர் சரவணன் உடனிருந்தார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை