சென்னையில் சினிமா பட பாணியில் நடந்த பரபரப்பு சம்பவம், மணமகன் கையில் இருந்த தாலியை பறித்து மணமகள் கழுத்தில் கட்ட முயன்ற காதலன்; திருமணம் நின்றதால் சோகத்தில் சென்ற உறவினர்கள்

தண்டையார்பேட்டை: சென்னை தண்டையார்பேட்டை நெடுஞ்செழியன் நகர் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ரேவதி (20). தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3வது தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (21), மரைன் இன்ஜினியர். ரேவதிக்கும், மணிகண்டனுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அப்போது, செப்டம்பர் 9ம் தேதி (நேற்று) தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் உள்ள முருகன் கோயிலில் திருமணத்தை நடத்தலாம் எனவும், அங்குள்ள மண்டபத்தில் விருந்துக்கும் ஏற்பாடு செய்து கொள்ளலாம் எனவும் பெரியோர்கள் முன்னிலையில் பேசி முடிவு செய்யப்பட்டது. மேலும் மணமகன் வீட்டார் சார்பில் அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ேநற்று முன்தினம் மாலை வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்தலாம் எனவும் அன்றைய தினமே பேசி முடிக்கப்பட்டது.இதையடுத்து இரு வீட்டாரும் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தடல்புடலாக செய்து வந்தனர். நேற்று திருமணம் என்பதால் நேற்று முன்தினமே உறவினர்கள் பலர், மணமகன், மணமகள் வீட்டுக்கு வந்திருந்தனர். இதனால் திருமண வீடுகள் களைகட்டியிருந்தது. இந்நிலையில் நேற்று காலை திருமணம் நடக்க இருந்த நேதாஜி நகரில் உள்ள முருகன் கோயிலுக்கு மணமகன், மணமகள் வீட்டார் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் என பலரும் வந்தனர். இதனால் திருமண விழா களைகட்டியது. காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் முகூர்த்த நேரம் என்பதால் நேரம் நெருங்க நெருங்க பரபரப்பானது. தாலி கட்டுவதற்கான நேரமும் நெருங்கியது. சரியாக காலை 7 மணியளவில், மங்கள வாத்தியங்கள் முழங்க, ஐயர் வேத மந்திரங்கள் ஓதியபடி மணமகன் மணிகண்டன் கையில் தாலியை எடுத்துக் கொடுத்தார். அதை அவர், மணமகள் ரேவதி கழுத்தில் கட்ட முயன்றார். அந்த நேரத்தில், திடீரென அருகில் நின்றிருந்த ஒரு வாலிபர், பாய்ந்து சென்று, மணமகனின் கையில் இருந்த தாலியை பறித்து, மணமகள் கழுத்தில் கட்ட முற்பட்டார். இதை பார்த்ததும் அங்கு திரண்டிருந்த அனைவருக்கும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஒருகணம் அப்படியே நிலைகுலைந்து போயினர். சற்றும் யோசிக்காமல் அடுத்த கணமே, அங்கு நின்றிருந்த மணமகளின் அண்ணன் நாகநாதன் பாய்ந்து சென்று, அந்த வாலிபரின் கையில் இருந்த தாலியை பறித்தார். கடும் ஆத்திரம் பொங்க, வாலிபரை சரமாரியாக அடித்து உதைத்தார். உறவினர்களும் சேர்ந்து தாக்கினர். கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு நிலவியது.இதையடுத்து ஆர்.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தாலி கட்ட முயன்ற அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். இதில், மணமகனின் கையில் இருந்த தாலியை திடீரென பறித்து மணமகளின் கழுத்தில் கட்ட முயன்ற வாலிபர் தண்டையார்பேட்டை கைலாசம் தெருவை சேர்ந்த சதீஷ் (25) என்பதும், ரேவதியின் காதலன் என்பதும் தெரிய வந்தது.இந்த வழக்கு வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. அதன்படி போலீசார் விசாரித்தனர். அப்போது, மாப்பிள்ளை வீட்டில் `திருமணத்திற்கு ரூ.5 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். எனவே திருமணம் நிறுத்தப்பட்டதால் எங்களது பணத்தை திருப்பிக்கொடுங்கள். மணமகள் ரேவதிக்கு எனது மகனை திருமணம் செய்து வைக்க மாட்டோம்’ என உறுதியாக இருந்தனர். பெண் வீட்டார் சார்பில் மாப்பிள்ளை வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பணத்தை தருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஆத்திரத்துடன் திருமணமே வேண்டாம் என ஆவேசத்துடன் கூறினர். மணமகனும், `இனிமேல் எப்படி நான் தாலி கட்டுவேன். இப்படிப்பட்ட பெண்ணுடன் எப்படி வாழ்வேன். இந்த திருமணமே வேண்டாம். நாங்கள் செலவழித்த பணத்தை கொடுங்கள்’ என்று கறாராக கூறினார். அதே நேரத்தில் மணமகள் ரேவதியும், `சதீஷுடன் தான் செல்வேன். இந்த திருமணத்தில் எனக்கு இஷ்டம் இல்லை’ என்று கூறிவிட்டார். எனவே, மணமகன் வீட்டார் அங்கிருந்து வெளியேறினர். திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்களும் மிகுந்த சோகத்துடன் அங்கிருந்து புறப்பட்டனர். இதனால் ேநற்று நடக்க இருந்த திருமணம் நின்றது. சினிமா பட பாணியில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்