சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: சென்னையில் குவிந்து கிடக்கும் குப்பையை உடனடியாக அகற்ற நடவடிக்கை வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:சென்னையில் மாண்டஸ் புயல் காரணமாக மணிக்கு 80 கி.மீ வேகத்தில் காற்று வீசியதில் மாநகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. புயல் மற்றும் மழையால் சாய்ந்த மரங்களும், மரக்கிளைகளும் உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன. ஆனால், அகற்றப்பட்ட மரங்கள் மற்றும் மரக்கிளைகளில் இருந்து விழுந்த இலைகள் மற்றும் சுள்ளிகள் இன்று வரை அப்புறப்படுத்தப்படவில்லை. அவை அனைத்து துப்புரவுத் தொழிலாளர்களால் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. புயல் காற்றில் விழுந்த மரங்களையும், மரக்கிளைகளையும் அகற்றுவதில் தமிழக அரசு துறைகளும், சென்னை மாநகராட்சியும் காட்டிய வேகம் ஈடு இணையற்றது. துப்புரவு தொழிலாளர்கள் ஆற்றிய பணிகள் பாராட்டத்தக்கவை. தமிழக அரசு நினைத்தால் சென்னை வெளியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் வாகனங்கள், தனியார் வாகனங்கள் ஆகியவற்றைக் கொண்டு, ஒரே நாளில் குப்பையை அகற்றி சென்னையை தூய்மையாக்க முடியும். எனவே, இனியும் தாமதிக்காமல் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குவிந்து கிடக்கும் மரக்கழிவு குப்பையை உடனடியாக அகற்ற தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய்ப்பரவலை தடுக்க குப்பை அகற்றப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினிகளை தெளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்