சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

சென்னை, ஜூலை 4: சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலையில் ஆதரவற்ற நிலையில் சுற்றிய 6,876 பேரை காவல் கரங்கள் குழுவினர் மீட்டுள்ளனர். இதையடுத்து ஆதரவற்றவர்களை மீட்கும் வகையில் மேலும் 3 வாகனங்களை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கி கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். சென்னை பெருநகர காவல்துறையில் ‘காவல் கரங்கள்’ அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பு கடந்த 2021ம் ஆண்டு முதல் 24 மணி நேரமும் ‘மனிதம் போற்றுவோம்’ ‘மனிதநேயம் காப்போம்’ என்ற வகையில் சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட மற்றும் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடல்கள் தன்னார்வலர்களின் உதவியுடன் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு கண்ணியத்துடன் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இதுவரை காவல் கரங்கள் மூலம் 6,876 வீடற்ற, ஆதரவற்ற நிலையில் உள்ள மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4,823 பேரை காப்பகங்களில் தங்க வைத்து 1,064 பேரை அவர்களின் குடும்பத்துடன் சேர்ந்து வைத்தும், 745 பேர் மனநல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பியும் வைக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் 244 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். உரிமை கோரப்படாத 3,712 இறந்த உடல்கள் தன்னார்வலர்கள் உதவியுடன் இறுதி மரியாதை செய்யப்பட்டுள்ளது.

காவல் கரங்கள் குழுவை வலுப்படுத்தும் வகையில் தி ரோட்டரி கிளப் மெட்ராஸ் சென்ட்ரல் அமைப்பினர் சார்பில் 3 இலகுரக மீட்பு வாகனங்கள் வழங்கப்பட்டது. அதற்கான நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் கடந்த 29ம் தேதி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்ேதார் கலந்து கொண்டு 3 மீட்பு வாகனங்களை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அப்போது சென்னை பெருநகர காவல்துறை தலைமையிட கூடுதல் கமிஷனர் கபில் குமார் சி சரட்கர் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை