சென்னையில் எடப்பாடி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

சென்னை: சட்டப்பேரவை இன்று கூட உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்றிரவு நடந்தது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையை தங்களது அணிக்கு ஒதுக்காத பட்சத்தில் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்பது எப்படி என விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. இதையொட்டி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்றிரவு நடந்தது. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில், அவரது அணி ஆதரவு எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.இதில், சட்டப்பேரவை கூட்டத்தில் எவ்வாறு நடந்து கொள்வது. மக்கள் நலன்சார்ந்த பிரச்னைகளில் எவற்றை எழுப்ப வேண்டும் என்று அப்போது எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏக்களுக்கு அறிவுரை வழங்கினார். அதே நேரத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கினார். அவருக்கு பதில், எதிர்க்கட்சி துணை தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமித்தார். அவரையே எதிர்கட்சி துணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி தரப்பில் சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்த பரபரப்பான சூழலில் சட்டப்பேரவை இன்று கூடுகிறது. சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவருக்கான இருக்கை தங்களுக்கு வழங்கப்படாத பட்சத்தில் அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கும் பட்சத்தில் சட்டப்பேரவையில் எந்த வகையில் பங்கேற்பது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இன்று பேரவையில் ஒதுக்கப்படும் இருக்கையை பொருத்து  அடுத்தகட்ட முடிவை எடுக்கலாம் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதனால், இன்றைய சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும்போது தான் இதுபற்றிய விவரம் தெரியவரும். இதற்கிடையில் இந்த சட்டப்பேரவை கூட்டம் முழுவதும் பங்கேற்போம் என்று ஓபிஎஸ் அணியினர் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை