சென்னையில் இருந்து இலங்கைக்கு ரூ.70 கோடி மெத்தபெட்டமைன் கடத்த முயன்ற 3 பேர் கைது: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மடக்கி பிடித்தனர்

 

மீனம்பாக்கம்: சென்னையிலிருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு ரூ.70 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் கடத்த முயன்ற 3 பேரை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6.92 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையிலிருந்து ராமநாதபுரம் வழியாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு, பல லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தப்படுவதாக, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் நேற்று அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில், கையில் பையுடன் ஒருவர் நின்று இருந்தார். அவரை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால், அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் 5 கிலோ 970 கிராம் கொண்ட உயர்ரக போதைப்பொருளான மெத்தபெட்டமைன் இருந்தது.

விசாரணையில், அவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பைசூல் ரஹ்மத் என்பதும், இவர் ராமநாதபுரத்தில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்த முயன்றதும் தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் படி, செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த மன்சூர் மற்றும் இப்ராஹிம் ஆகிய 2 நபர்களை அதிகாரிகள் கைது செய்தனர். 3 பேரிடம் இருந்து ரூ.70 கோடி மதிப்புள்ள 6 கிலோ 920 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் கும்பலை, தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்