சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

புழல், ஜூலை 18: சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நீர்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுக்கின்றனர். சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் ஒன்றாக புழல் ஏரி உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில், நேற்றைய நிலவரப்படி 2697 மில்லியன் கன அடி நீர் இருப்பில் உள்ளது. வினாடிக்கு 36 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்கள் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 176 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு செல்லும் உபநீர் கால்வாய் அருகே உள்ள ஆலமரம் ராஜாங்கம் நகர் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள தரை பாலத்தின் வழியாக வெளியேறி புழல் ஏரியில் கலக்கிறது. இந்தக் கழிவு நீரில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக திரிகிறது. இதனால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரி மாசடைந்து வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து செங்குன்றம் ஆலமரம் பகுதி அருகே தரை பாலத்தில் வழியாக கழிவுநீர் செல்வதை தடுத்து நிறுத்திடவும் ஏரியில் பன்றிகள் நடமாட்டத்தை தடுக்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியில் கரைகள் இல்லாத பகுதியான செங்குன்றம் ஆலமரம் திருவள்ளூர் நெடுஞ்சாலையில் நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ராஜாங்கம் நகர் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தரை பாலத்தின் வழியாக புழல் ஏரியில் கலக்கிறது. இதனால் தண்ணீர் மாசடையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு பகுதியான புழல் அடுத்த சண்முகபுரம் ஐயப்பன் கோவில் அருகே உள்ள புழல் ஏரியில் ஆகாயத்தாமரைகள் மற்றும் செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. மேலும், குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதால் குடிநீர் மாசு ஏற்படுகிறது. மேலும் இந்தப் பகுதியில் ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. எனவே, தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், புதர்மண்டிக் கிடக்கும் ஆகாய தாமரைகளை அகற்றிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியை வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

சிஐடி எஸ்ஐயை தாக்கிய வழக்கில் 7 பேர் கைது

பனையம்மன் கோயிலில் தேர்த்திருவிழாl திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

பள்ளி மாணவர்கள் இடையே மோதல் வேலூர் அண்ணா சாலையில் பரபரப்பு