சென்னிமலையில் சாலையில் மண்ணை கொட்டிய டிப்பர் லாரியை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

ஈரோடு, மே 11: சென்னிமலை அருகே சாலையில் மண்ணை கொட்டி சென்ற டிப்பர் லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே பனியம்பள்ளி ஊராட்சி பகுதியில் ஜல்லி கிரசர் ஆலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைகளில் இருந்து ஜல்லி கற்கள், மண் ஆகியவற்றை டிப்பர் லாரிகள் மூலமாக செந்தாம்பாளையம், புலவனூர் ஆகிய கிராமங்கள் வழியாக பல்வேறு ஊர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை செந்தாம்பாளையம் வழியாக ஒரு டிப்பர் லாரி கற்களுடன் கலந்த மண்ணை கொண்டு சென்ற போது லாரியின் பின்பக்க கதவை சரியாக மூடாததால் தார் ரோட்டில் நீண்ட தூரத்திற்கு கற்களுடன் மண் விழுந்தது. இதனால், அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள், சாலையில் மண்ணை கொட்டி சென்ற டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சிறை பிடித்தனர். மேலும், அவ்வழியாக வந்த பிற டிப்பர் லாரிகளையும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இனி வரும் நாட்களில் கற்கள் மற்றும் மண் ஏற்றி வரும் போது பாதுகாப்பாக கொண்டு செல்வதாக உறுதியளித்தனர். மேலும், சாலையில் கொட்டப்பட்டிருந்த மண், கற்களை அப்புறப்படுத்துவதாகவும் உறுதியளித்தனர். இதனால், பொதுமக்கள் சமாதானம் அடைந்து சிறைபிடித்த லாரிகளை விடுவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி