செங்குன்றம் அருகே பைபாஸ் சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து

புழல்: எண்ணூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து 18 டன் சமையல் எரிவாயு நிரப்பிய டேங்கர் லாரி, ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு நேற்று சென்றது. சென்னையை சேர்ந்த சரவணன்(32) என்பவர் இதனை ஓட்டிச்சென்றார்.  மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலை அருகே சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலைக்கு செல்வதற்காக நேற்று மதியம் 2 மணியளவில் வளைவில் திரும்பியது. அப்போது, எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலை நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டேங்கர் லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்து கொண்டு டிரைவர் அங்கிருந்து தப்பியோடினார். தகவலறிந்த செங்குன்றம் தீயணைப்பு துறையினர் மற்றும் சோழவரம் போலீசார்  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, டேங்கர் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், சாலையில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அருகில் செல்லாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், விபத்து நடந்த இடத்தின் அருகில், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. அங்கு ஏராளமானோர் கூடியிருந்ததால், போலீசார், அவ்வழியாக சென்ற வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தினர். இதனையடுத்து, 4 பொக்லைன் இயந்திரங்களின் உதவியோடு 2 மணி நேரம் போராடி டேங்கர் லாரியை பத்திரமாக மீட்டனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்….

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்