செங்கல் சூளையில் வேலை செய்த கணவன், மனைவி மர்மச்சாவு * ஆற்றில் சடலங்கள் மீட்பு * கொலையா? போலீசார் விசாரணை ஆரணி அருகே 3 பெண் குழந்தைகள் தவிப்பு

ஆரணி, ஜூன் 25: ஆரணி அருகே செங்கல் சூளையில் வேலை செய்து வந்த 3 பெண் குழந்தைகளின் பெற்றோரான கணவன், மனைவி மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். ஆற்றில் சடலங்களை மீட்ட போலீசார் அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே உள்ள ஆலகிராமம் இருளர் சமூகத்தை சேர்ந்தவர் பச்சையப்பன்(40), கூலித்தொழிலாளி. இவரது மனைவி கலையரசி(29). இவர்களுக்கு சந்தியா(13), பவித்ரா(11), பூமிகா(9) என்ற 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஓராண்டிற்கு முன்பு பச்சையப்பன் தனது மனைவி, மகள்கள், மாமனார், மாமியார் ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தில் உள்ள இளையராஜா என்பவரது செங்கல் சூளையில் வேலைக்காக வந்தனர். அதன்பின்னர், அங்கேயே தங்கி சூளையில் வேலை செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் பச்சையப்பன் செங்கல் சூளையில் வேலையை முடித்துவிட்டு, கமண்டல நாகநதி ஆற்றின் எதிரே உள்ள அவரது உறவினர்கள் வீட்டிற்கு சென்று கறி குழம்பை கொடுத்துவிட்டு, அங்கேயே சாப்பிட்டுவிட்டு வருவதாகவும், அதுவரையில் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறும், தனது மாமனார் ரவியிடம் கூறிவிட்டு, பச்சையப்பன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு ஆற்றில் இறங்கி சென்றுள்ளார்.அதன்பிறகு, கணவன், மனைவி இருவரும் வீட்டிற்கு வரவில்லை. இதனால், சந்தேமடைந்த அவரது மாமனார் மற்றும் உறவினர்கள் தேடிக்கொண்டு சென்றபோது, செங்கல் சூளை அருகில் உள்ள கமண்டல நாகநதி ஆற்றில் பச்சையப்பன், கலையரசி இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஆரணி டவுன் மற்றும் களம்பூர் போலீஸ் எஸ்ஐக்கள் சுந்தரேசன், கோவிந்தராஜூலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

பின்னர், இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கலையரசியின் தந்தை ரவி(50) களம்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக பச்சையப்பன், அவரது மனைவி கலையரசி ஆகிய இருவரும் அரளி விதையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றது தெரியவந்தது. எனவே, குடும்ப தகராறில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது யாராவது முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்து ஆற்றில் சடலங்களை வீசி சென்றார்களா? இறப்புக்கு என்ன காரணம்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் கணவன், மனைவி இருவரும் மர்மமான முறையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரை இழந்து 3 பெண் குழந்தைகளும் தவிப்பது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக உள்ளது.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு