செங்கல்பட்டு அருகே பள்ளி வளாகத்தில் மழைநீர் குட்டை: மாணவர்கள் அவதி

 

செங்கல்பட்டு‌, ஜூலை 14: செங்கல்பட்டு அருகே ஆத்தூர் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் குட்டை வருவாகி உள்ளதால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். செங்கல்பட்டு காஞ்சிபுரம் நெடுஞ்சாலை அருகே ஆத்தூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளி வளாகத்தில் ஒருபகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. மழைநீர் தேக்கத்தால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக நோய் பாதிப்புகளை ஏற்படுத்தும் அவல நிலையில் உள்ளது. மேலும், பள்ளி வளாகத்தில் செடி, கொடிகள் முளைத்து புதர் மண்டிக் கிடப்பதால் விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

எனவே, மாணவர்களின் நலன் கருதி பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளி வளாகத்தில் உருவாகியுள்ள புதர்களை அகற்றிட வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது