செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் புகுந்த 6 அடி நல்லபாம்பு: வனப்பகுதியில் விடப்பட்டது

 

செங்கல்பட்டு, மார்ச் 24: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவில் புகுந்த 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை வனத்துறையினர் உயிருடன் பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். செங்கல்பட்டு தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகிறது. உடல் நிலை பாதித்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நவீன மருத்துவ கட்டமைப்பு வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

மேலும், குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் இங்கு தனி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் மரம், செடி கொடிகள் நிறைந்து நிழல் தரும் இடமாக உள்ளது. இந்நிலையில், குழந்தைகள் சிலர் நேற்று பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, பூங்காவில் இருந்த பைப்பின் உள்ளே இருந்து உஷ்… உஷ்…. என்று சத்தம் வந்தது. இதனைக் கேட்ட பெற்றோர்கள் அருகில் சென்று பார்த்தபோது, அங்கு பாம்பு ஒன்று பதுங்கியிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அலறிக் கூச்சலிட்டனர்.

குழந்தைகளை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். மேலும், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், வனத்துறையினர் விரைந்து சென்று பூங்காவில் பதுங்கியிருந்த சுமார் 6 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை உயிருடன் லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். குழந்தைகள் பூங்காவில் பாம்பு புகுந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி