செங்கதிர்த் தேவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக!

குறளின் குரல்-137(புல்லறிவாண்மை: அதிகாரம் 85)அறிவில்லாதிருத்தல் எத்தனை சங்கடமானது, எவ்வளவு துயர்தர வல்லது என்பதைப்பற்றி மாபெரும் அறிவாளியான வள்ளுவர் சிந்தித்துப் பார்த்திருக்கிறார். ‘மனிதர்கள் தங்கள் அறியாமையை அகற்றப் பாடுபட வேண்டும், கட்டாயம் அறிவுபெற வேண்டும், வாழ்வின் நோக்கமே அறியாமையை அகற்றிக் கொள்வதுதான்’ என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கிறார். அறிவின் பெருமையைச் சொல்ல, அறியாமையின் சிறுமையைப் பற்றியும் அவர் எழுதுகிறார்.அறிவில்லாதவர்களின் இயல்பு பற்றியும் அவர்களால் நேரும் இடர்ப்பாடுகள் பற்றியும் ஒரு தனி அதிகாரத்தில் அவர் விவரிக்கிறார். ‘புல்லறிவாண்மை’ என்ற தலைப்பில் (அதிகாரம் 85) பத்துப் பாடல்களில் அவர் சொல்லும் கருத்துகள் அறிவுடையவர்களால் சிந்திக்கத் தக்கவை.  ‘அறிவின்மை அன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு.’ (குறள் எண் 841)இல்லாமை எனச் சொல்லப்படும் பலவற்றுள் அறிவில்லாமல் இருத்தலே கொடிய இல்லாமையாகும்.  மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய அளவு கொடியதாகக் கருதாது.‘அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்இல்லை பெறுவான் தவம்.’ (குறள் எண் 842)அறிவில்லாதவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுக்கிறான் என்றால் அதற்குக் காரணம் வேறொன்றும் இல்லை. அதைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.‘அறிவிலார் தந்தம்மைப் பீழிக்கும் பீழைசெறுவார்க்கும் செய்தல் அரிது.’ (குறள் எண் 843)அறிவில்லாதவர் தம்மைத் தாமே துன்புறுத்தும் துன்பம், அவருடைய பகைவர்களாலும் அவர்களுக்குச் செய்ய முடியாத அளவினதாகும்.‘வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மைஉடையம்யாம் என்னும் செருக்கு.’ (குறள் எண் 844)ஒருவன் தன்னைத் தானே அறிவுடையவனாக மதித்துக் கொள்ளும் ஆணவத்திற்குப் பெயர்தான் அறியாமை என்பது.‘கல்லாத மேற்கொண் டொழுகுதல் கசடறவல்லதூஉம் ஐயம் தரும்’ (குறள் எண் 845)அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களைக் கற்றதுபோல் காட்டிக் கொண்டால், அவர் உண்மையிலேயே நன்கு அறிந்த நூல்களைப் பற்றிக் கூட அவற்றை அவர் அறிந்தவர்தாமா என்ற சந்தேகம் எழும்.‘அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயின்குற்றம் மறையா வழி.’ (குறள் எண் 846)தம்மிடம் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காதபோது உடம்பில் மறைத்தற்குரிய பகுதியை ஆடையால் மறைத்தல் என்பது மடமைதான். (அறியாமையை நீக்கிக் கொள்ளாமல் உடலின் மானத்தை மறைத்து என்ன பயன்?)‘அருமறை சோரும் அறிவிலான் செய்யும்பெருமிறை தானே தனக்கு.’ (குறள் எண் 847)நல்வழிக்கான அறிவுரைகளைப் போற்றி அவ்வழியில் நடக்காத அறிவிலிகள், தமக்குத் தாமே பெரிய துன்பத்தைத் தேடிக் கொள்வார்கள்.‘ஏவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்போஒம் அளவுமோர் நோய்.’ (குறள் எண் 848)தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாதவனாய் தானாகவும் உணராதவனாய் இருப்பவனுடைய உயிர் போகும் அளவும் அவன் இந்த உலகிற்கு ஒரு நோய் போன்றவனே ஆவான். (அவனால் உலகிற்குப் பயனில்லை என்பது மட்டுமல்ல, கெடுதலும் நேரும்.)‘காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு.’ (குறள் எண் 849)அறிவற்றவன் தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு தன்னை அறிவுடையவன்போல் காட்டிக் கொள்வான். அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயல்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்.‘உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்து அலகையா வைக்கப்படும்.’ (குறள் எண் 850)

உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று மறுக்கும் அறிவற்றவன் இந்த உலகில் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான். (பிற மனிதர்கள் அவனை நெருங்க மாட்டார்கள்.)

அறிவற்றவர்கள் தங்களுக்குத் துன்பம் விளைவித்து மற்றவர்களுக்கும் துன்பம் ஏற்படுத்துபவர்கள் என்பதை வள்ளுவம் அழகாக விவரிக்கிறது. அறிவுதான் அடையவேண்டிய பேறுகளில் எல்லாம் தலையாயது.அதனால்தான் மந்திரங்களின் ராஜா எனக் கருதப்படுவதும் விஸ்வாமித்திரரால் கண்டுணரப் பட்டதுமான காயத்ரி மந்திரம் அறிவைத் தூண்டச் சொல்லி சூரியக் கடவுளை வேண்டுகிறது. காயத்ரி மந்திரத்தின் மொழிபெயர்ப்பை மகாகவி பாரதியார் தாம் எழுதிய முப்பெரும் பாடல்களில் ஒன்றான பாஞ்சாலி சபதத்தின் உரைக்குறிப்பில் தருகிறார்:‘செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்‘அவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக!’என்பது மகாகவியின் காயத்ரி மந்திரத் தமிழாக்கம். அறிவு தூண்டப்பட்டுவிட்டால் போதும். அந்த அறிவைப் பயன்படுத்தி நாம் அனைத்துப் பேறுகளையும் அடைய முடியும். ஆனால் அறிவில்லாவிட்டால் எந்தப் பேறு கிட்டியும் பயனில்லை.அறிவுலக மேதைகளால்தான் இந்த உலகம் முன்னேறுகிறது. ஒவ்வொரு துறை வளர்ச்சியும் அந்தந்தத் துறை அறிவாளிகளால்தான் சாத்தியப்படுகிறது. எனவே அறியாமையைப் போக்கிக் கொண்டு அறிவை அடைய அனைவரும் முயலவேண்டும் என்பதே வள்ளுவம் தெரிவிக்கும் செய்தி….. 

தங்களின் அறியாமையைத் தாங்களே ஏற்காமல் அதை அறிவுபோல் எண்ணிப் பிரகடனம் செய்யும் போக்கும் இன்று தலைதூக்கியுள்ளது.ஓர் இலக்கியக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஒருவர், நடுநடுவே உரையாற்றிக் கொண்டிருந்தார். மொத்தப் பேச்சாளர்கள் உரையாற்றிய நேரத்தை விடவும் அவரது ஒருங்கிணைப்பு உரைகளின் மொத்த நேரம் பல மடங்கு கூடுதலாய் இருக்கும்!

தன் அறியாமையைத் தனது உரைகளால் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்த அவரது போக்கை எண்ணி பார்வையாளர்கள் முகத்தில் மெல்லிய முறுவலுடன் கூடிய சலிப்பெழுந்தது. எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எஸ். விஸ்வநாதன், எம்.எஸ். உதயமூர்த்தி, எம்.எஸ். சுவாமிநாதன் இவர்களெல்லாம் உடன்பிறந்தவர்கள் என்றும் ஒரே குடும்பத்தில் எத்தனை பிரமுகர்கள் என்றும் அவர் தம் பேச்சினிடையே வியப்பைப் புலப்படுத்தியபோது பார்வையாளர்கள் உண்மையிலேயே அவரது அறியாமையின் விசாலத்தை எண்ணி விக்கித்துத்தான் போனார்கள்! நா. பார்த்தசாரதி மட்டுமல்ல, அவர் மனைவி இந்திரா பார்த்தசாரதியும் சிறப்பான எழுத்தாளர்தான் என அவர் குறிப்பிட்டபோது அவையில் எழுந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமாகியது. தம் அறியாமையை உணராமலேயே அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்ததுதான் அவலத்திலும் பெரிய அவலம். வள்ளுவர் தன்னைப் பற்றி ஓர் அதிகாரமே எழுதியிருக்கிறார் என்ற விவரத்தை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை….தற்போது தொண்ணூற்றியெட்டு வயதைத் தொட்டிருப்பவரும் புதுச்சேரியில் வாழ்பவருமான தற்கால இலக்கியச் சாதனையாளர் கி. ராஜநாராயணன், தமது ஒரு படைப்பில் முதல்முதலாகக் கடலைப் பார்த்த கிராமத்தானின் பேச்சைப் பற்றி எழுதியிருப்பார். ‘அடேடே. மழை இங்க சக்க போடு போட்டிருக்கே! எத்தனை தண்ணீர்!’ என்பதுபோல அந்தப் பதிவு நீளும். வாசிப்பவர்கள் முகத்தில் ஒரு மெல்லிய முறுவல் மலரும்!பிரபல ஓவியர் கோபுலு தீட்டிய ஒரு சித்திரமும் அதன் கீழே இருந்த வாசகங்களும் இன்றும் நினைத்தால் நகைப்பை ஏற்படுத்துபவை. ஒரு கிராமத்து மனிதர் அஞ்சல் அலுவலகத்தின் வெளியே வந்து தன் கையிலிருந்த பார்சலைக் காண்பித்துத் தன் மனைவியிடம் சொல்வார்:‘எடை அதிகமாயிருக்காம். அதனால் இன்னும் கூடுதலா அஞ்சல்தலை ஒட்டணும்னு சொல்றாங்க!’அதற்கு அந்த மனைவி சொல்லும் பதிலில்தான் இருக்கிறது அபாரமான நகைச்சுவை:‘தபால் தலை ஒட்டினா, அதோட கனமும் சேர்ந்து எடை இன்னும் அதிகமால்ல ஆயிரும்?’….*அறிவாளி திரைப்படத்தில் வரும் தங்கவேலு நகைச்சுவை அனைவரும் அறிந்தது. தங்கவேலுவின் மனைவியாக வரும் டி.பி. முத்துலட்சுமியின் அறியாமைதான் அந்தப் படத்தின் நகைச்சுவைக்கான காரணம். பூரி தயாரிக்கத் தெரியாத மனைவி தொடர்ந்து ‘அதான் தெரியுமே!’ எனச் சொல்வதும் தங்கவேலு அடுத்தடுத்து எப்படிப் பூரி தயாரிப்பதென விளக்குவதும் காலத்தை வென்ற நகைச்சுவையாக இன்றளவும் ரசிக்கப்படுகிறது.  எட்டாம் வகுப்புப் படிக்கும் தன் மகனுக்குப் புத்தகம் வாங்குவதற்காக கிராமத்திலிருந்து பட்டணத்திற்கு வந்தார் ஒரு கிராமவாசி. ஆனால், எட்டாம் வகுப்புப் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்து விட்டன. இப்போது என்ன செய்வது? யோசித்தார் அவர். அதனால் என்ன என்று கணக்குப் போட்டு புத்திசாலித்தனமாக இரண்டு நான்காம் வகுப்புப் புத்தகங்களை வாங்கிச் சென்றாராம்! அவரது அறிவார்ந்த நடவடிக்கையை நாம் மெச்சத்தானே வேண்டும்!  அறியாமை என்பது எத்தகையது என விளக்கும் வகையில் அமைந்த கண்ணதாசன் திரைப்பாடல் ஒன்று உண்டு. ‘பதினாறு வயதினிலே’ திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பில், மலேசியா வாசுதேவனும் எஸ். ஜானகியும் பாடிய பாடல் அது. பாடல் வரிகள் இதோ:‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னுயானைக்குஞ்சு சொல்லக் கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டுகதையில தானே இப்போ காணுது பூமிஇதுமட்டும்தானா இன்னும் இருக்குது சாமி!கூத்துமேடை ராஜாவுக்கு நூத்திரெண்டு பொண்டாட்டியாம்நூத்திரெண்டு பெண்டாட்டியும் வாத்துமுட்டை போட்டதுவாம்பட்டத்து ராணி அதில பதினெட்டு பேருபதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்தியாறுமொத்தம் இருபத்தியாறுசின்னக் குட்டிகளின் மேல் ஆணை புது சட்டிகளின் மேல் ஆணைஇது வள்ளுவனின் பாட்டிலுண்டு பரம்பரைக் கதையிலுண்டு…’என வள்ளுவரையும் தன் வரிகளில் இணைத்துக் கொண்டு தொடர்கிறது அந்த நகைச்சுவைப் பாடல்!*முன்ஜாக்கிரதைப் பேர்வழி ஒருவர் ரயிலில் பயணம் செய்ய முடிவுசெய்து பயணச் சீட்டு வாங்க ரயில் நிலையத்திற்கு வந்தார். தான் செல்லும் இடத்தைச் சொல்லி தனக்கு இரண்டு பயணச் சீட்டுகள் வேண்டும் எனக் கேட்டார்.‘ஒருவர்தானே போகிறீர்கள்? பின் இரண்டு பயணச் சீட்டுகள் எதற்கு?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் சொன்ன பதில்:‘ஒன்று தொலைந்துவிட்டால் இன்னொன்று வேண்டுமல்லவா? அதற்குத்தான்!’‘அதுசரி. அந்த இரண்டாவதும் தொலைந்துபோனால் அப்போது என்ன செய்வீர்கள்?’ எனக் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில்:‘அதனால் என்ன? எப்படியும் என்னிடம் சீசன் டிக்கட் இருக்கிறதே!’ இப்படிப்பட்ட மனிதர்களை என்ன செய்வது? இவர்களை எண்ணித்தான் வள்ளுவர் அறியாமையை விளக்கிப் புல்லறிவாண்மை என்ற அதிகாரம் எழுதினாரோ?வாழ்நாள் முழுவதும் முயன்று பற்பல நூல்களைக் கற்று நம் அறியாமையை நீக்கிக் கொள்வதுதான் வாழ்வின் நோக்கம். ‘பல நூல்களைப் படிக்க நேரமில்லை, ஒரே ஒரு நூலைப் படித்து அறியாமையைப் போக்கிக் கொள்ள முடியுமா?’ என்று நேரப் பற்றாக்குறையால் தவித்துவரும் இன்றைய இளைஞர்கள் கேள்வி எழுப்பலாம்.அதற்கும் ஒரு வழி இருக்கிறது. திருக்குறள் என்ற ஒரே ஒரு நூலை முழுமையாகப் படித்து அது சொல்லும் கருத்துகளை மனத்தில் உள்வாங்கிக் கொண்டால் போதும். அறியாமை முற்றிலும் அகன்று விடும். பிறகு வேறு எந்த நூலையும் படிக்கத் தேவையில்லை.‘ஆயிரத்து  முந்நூற்று முப்பது  அருங்குறளும்பாயிரத்தி னோடு பகர்ந்ததன் பின்- போயொருத்தர் வாய்க்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவராய்க் கேட்க வீற்றிருக்க லாம்!’எனத் திருவள்ளுவமாலை என்ற திருக்குறளைப் பற்றிய பெருமைகளைப் பேசும் வெண்பாத் தொகுப்பு நூலில், புலவர் நத்தத்தனார் பாடியிருக்கும் வெண்பா அதைத்தான் சொல்கிறது.எல்லா நூலின் சாரத்தையும் ஒரே நூலில் அடக்கியிருப்பதுதான் திருவள்ளுவரது திருக்குறளின் பெரிய பெருமை! அது நம் தமிழில் அமைந்திருப்பது நம் தாய்மொழியின் மிகப் பெரிய பெருமை.(குறள் உரைக்கும்)திருப்பூர் கிருஷ்ணன்…

Related posts

ரிஷப ராசிக்காரர்களுக்கு வீடு யோகம் தரும் அன்னை

ஜாதகப்படி கடன் இல்லாத வாழ்க்கை வாழ முடியுமா?

கிறிஸ்தவம் காட்டும் பாதை