சூலூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது

சூலூர் , ஏப் 30: சூலூர் பகுதியில், தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்து 30 பவுன் நகைகளை அதிரடியாக மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம், சூலூரில் கடந்த 2 மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இந்நிலையில், திருட்டில் ஈடுபட்ட மர்மநபர் நூதன முறையில் வீட்டு உரிமையாளர்களை திசை திருப்பி திருடியது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கருமத்தம்பட்டி டிஎஸ்பி ஆனந்த் ஆரோக்கியராஜ் மேற்பார்வையில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில், சூலூர் ராசிபாளையம் பகுதியில் அரசு போக்குவரத்து கழக நடத்துனர் கிருஷ்ணன் என்பவர் வீட்டில் மர்ம நபர் திருட்டில் ஈடுபட்டார். அவரது வீட்டில் 9 பவுன் நகை திருடு போனது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை நேற்று தென்னம்பாளையம் பகுதியில் கிருஷ்ணன் ஏதேச்சையாக பார்த்துள்ளார். உடனடியாக சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

அதன்பேரில், சூலூர் எஸ்ஐ ராஜேந்திர பிரசாத் போலீசாருடன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று கிருஷ்ணன் அடையாளம் காட்டிய நபரை மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில், மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த பழனி என்பவரது மகன் முத்துக்குமார் (34) என்பதும், இவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. தொடர் விசாரணையில், பசுமை வீடுகள் எனப்படும் அரசால் கடன் வாங்கி கட்டியுள்ள வீடுகளை நோட்டமிட்டு அந்த வீடுகளில் பொருத்தியுள்ள சூரிய மின் சக்தி பேனலை சோலார் பவர் யூனிட் சரி செய்வதற்காக தன்னை அரசு நியமித்துள்ளதாக கூறி அந்த வீடுகளுக்கு சென்று மின்சார பேனலை சரி செய்வதாக கூறிவிட்டு வீட்டு உரிமையாளரை மாடிக்கு அனுப்பிவிட்டு வீட்டிற்குள் இருக்கும் பீரோ மற்றும் அறைகளில் திருடுவதை வாடிக்கையாக கொண்டவர் என்பதும், இவர் மீது மதுரை மற்றும் புறநகர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வழக்கு உள்ளதும், கோவை, திருப்பூரில் கைவரிசை காட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து 30 பவுன் நகைகளை பறிமுதல் செய்து, முத்துக்குமாரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை