சூரப்பா ஓய்வு பெற்றாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்: நீதிபதி கலையரசன் தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஓய்வு பெற்றாலும் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என விசாரணை ஆணையத்தின் தலைவர் நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா கடந்த ஆண்டு தமிழக அரசிடம் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதில் பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்றும், பல்கலைக்கழகத்திற்கு தேவையான நிதியை நாங்களே திரட்டிக்கொள்கிறோம், மாநில அரசின் தயவு தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.200 கோடி நிதி முறைகேடு, பணி நியமனத்தில் ரூ.80 கோடி லஞ்சம் வாங்கியது, ஐஐடியில் பணியாற்றி வந்த அவரது மகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் கவுரவ பதவி வழங்கியது என பல்வேறு குற்றச்சாட்டுகள் துணைவேந்தர் சூரப்பா மீது எழுந்தது.இதையடுத்து, தமிழக அரசு தாமாக முன்வந்து சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை 2020 நவம்பர் 11ம் தேதி அமைத்தது. மேலும் சூரப்பா விசாரணை குழுவில் 13 பேரை நியமித்து மூன்று மாதத்திற்குள் புகார்களை விசாரித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டிருந்தது.சூரப்பா விசாரணை ஆணையத்தின் காலக்கெடு கடந்த பிப்ரவரி 11ம் தேதியோடு முடிய இருந்ததால், நீதிபதி கலையரசன் அரசிடம் கால நீட்டிப்பு தேவை என கேட்டிருந்தார். இதையடுத்து, துணைவேந்தர் சூரப்பா குற்றச்சாட்டுகள் மீது ஆதாரங்கள் இருந்ததால் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவின் பதவிக் காலம் நாளை (11ம் தேதி) முடிவடையும் நிலையில் சூரப்பா பதவி நீட்டிப்பு கேட்பதாக தகவல் வெளியானது. அதனை ஏற்று இரண்டு நாட்களில் ஆளுநர் பதவி நீட்டிப்பு வழங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், சூரப்பா விசாரணை ஆணையத்தின் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ஓய்வு பெற்றாலும், முறைகேடு மீதான விசாரணைக்கு ஆஜராக வேண்டும். மேலும் அடுத்த வாரத்தில் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என்றார்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை