சுவரில் எழுதினால் வேண்டுதல் நிறைவேறும் ஜேஇஇ, நீட் தேர்வில் வெற்றி பெற அருள்புரியும் ராஜஸ்தான் கோயில்: வடமாநில மாணவர்கள் நம்பிக்கை

கோடா: ராஜஸ்தானில் உள்ள கோயில் சுவரில் ஜேஇஇ, நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமென எழுதினால் தங்களின் வேண்டுதல் நிறைவேறுவதாக ஏராளமான வடமாநில மாணவர்கள் நம்பிக்கை கொண்டு குவிகின்றனர். ராஜஸ்தானின் கோடா நகரில் ஜேஇஇ, நீட் தேர்வுக்கு பயிற்சி தர ஏராளமான தனியார் பயிற்சி மையங்கள் உள்ளன. இங்கு, ராஜஸ்தான் மட்டுமின்றி பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் வந்து படிப்பது வழக்கம். இவ்வாறு கோடா நகருக்கு வரும் மாணவர்கள் அங்குள்ள கோயில் சுவரில் எழுதி வைத்தால், தேர்வில் தேர்ச்சி பெறலாம் என்ற ஆழமான நம்பிக்கை கொண்டுள்ளனர்.தல்வண்டி பகுதியில் அமைந்துள்ள ராதா கிருஷ்ணன் கோயிலின் சுவரில் பலரும் ‘தயவு செய்து என்னை நீட் தேர்வில் தேர்ச்சி பெறச் செய்யுங்கள்’, ‘எய்ம்ஸ் டெல்லியில் எனக்கு சீட் கிடைக்க வேண்டும்’, ‘ஐஐடி டெல்லியில் எனக்கு படிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும்’ என தங்களின் பிரார்த்தனைகளை எழுதி வைத்துள்ளனர். இது குறித்து கோயில் பூசாரி ஒருவர் அளித்த பேட்டியில், ‘‘2000ம் ஆண்டில் சில மாணவர்கள் இவ்வாறு கோயில் சுவரில் எழுதினர். அவர்கள் தேர்ச்சி பெற்றதால் இது பிரபலமடைந்தது. ஆரம்பத்தில் கோயில் சுவரை பாழாக்குகின்றனர் என நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தோம். சுவரில் எழுதும் மாணவர்களை எச்சரித்தோம். ஆனால் நாளடைவில் இதன் மூலம் கோயில் பிரபலமடைந்தது. இப்போது தினமும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தரிசிக்க வருகின்றனர். இதனால் மாணவர்கள் எழுதும் சுவருக்கு ‘நம்பிக்கை சுவர்’ என பெயர் சூட்டி அவர்களுக்காகவே அந்த பகுதியை ஒதுக்கிவிட்டோம். மாணவர்கள் மட்டுமின்றி நம்பிக்கை கொண்ட அவர்களின் பெற்றோர்களும் வந்து எழுதிச் செல்வார்கள். வேண்டுதல் நிறைவேறிய பலரும் கோயிலுக்கு நன்கொடையும் தருகின்றனர். எனவே 2 மாதத்திற்கு ஒருமுறை சுவருக்கு பெயிண்ட் அடித்து புதுப்பிக்கிறோம்’’ என்றார்….

Related posts

ஹத்ராஸில் சத்சங்க நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிப்பு!

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

ஹத்ராஸில் சத்சங் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 122ஆக உயர்வு!