சுற்றுலா தலமாக மாறும் அமராவதி, திருமூர்த்தி அணைகள்-தமிழக அரசு உத்தரவு

உடுமலை : அமராவதி, திருமூர்த்தி அணைகளை சுற்றுலா தலமாக மாற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 89 அணைகள் உள்ளன. இதில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி, திருமூர்த்தி அணைகளும் அடங்கும். அமராவதி அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலமும், திருமூர்த்தி அணையின் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும், உடுமலை நகராட்சி உட்பட நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளை பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அமராவதி அணையின் கீழ் பகுதியில் ஒரு பூங்கா உள்ளது. அது உரிய முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் எந்த அம்சமும் அந்த பூங்காவில் இல்லாததால், வருபவர்கள் அணையை மட்டும் பார்த்துவிட்டு செல்கின்றனர். அதேபோல, திருமூர்த்தி அணையில் பூங்கா எதுவும் இல்லை. பூங்கா அமைக்க கடந்த சில ஆண்டுக்கு முன்பு இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையை பார்த்து செல்கின்றனர். பலர் தடையை மீறி அணையில் குளித்து செல்கின்றனர். அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பஞ்சலிங்க அருவியில் குளித்து செல்கின்றனர். இங்கு வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம் உள்ளிட்டவை இருந்தாலும், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் எந்த சிறப்பு கட்டமைப்பு வசதியும் இல்லை.இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 15 அணைகளை சுற்றுலா தலமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சுற்றுலா துறை இயக்குநர், தோட்டக்கலை துறை இயக்குநர், அணைகள் பாதுகாப்பு இயக்கக தலைமை பொறியாளர் ராஜாமோகன் ஆகியோரை கொண்ட 3 பேர் குழுவை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.இக்குழுவினர் ஒவ்வொரு அணைக்கும் சென்று, அங்கு மேற்கொண்ட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர். ஏற்கனவே, கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஆய்வு செய்த குழுவினர், விரைவில் திருப்பூர் மாவட்டம் அமராவதி, திருமூர்த்தி அணைகளிலும் ஆய்வு செய்ய உள்ளனர்.இந்த அணைகளில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு சவாரி, பூங்கா, பொழுதுபோக்கு அம்சங்கள், ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.அமராவதி அணையில், உள்ளாட்சி அமைப்பு மூலம் படகு சவாரி நடத்தப்பட்டாலும், பெரும்பாலும் இயக்கப்படாத நிலையே உள்ளது.கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும். அரசுக்கு வருவாயும் கூடும். அமராவதி, திருமூர்த்தி அணைகள் சுற்றுலா தலமாக மாறுவதன் மூலம் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுவது குறிப்பிடத்தக்கது….

Related posts

மூன்று புதிய குற்றச்சட்டங்களை அமல்படுத்திய ஒன்றிய அரசை கண்டித்து திமுக வழக்கறிஞர் அணி சார்பில் நாளை மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : 10-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு பொது விடுமுறை

MY V3 ADS நிறுவனர் சக்தி ஆனந்தனுக்கு ஜூலை 19 வரை நீதிமன்ற காவல்!