Saturday, June 29, 2024
Home » சுதரிசனன் : காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்

சுதரிசனன் : காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்

by kannappan
Published: Last Updated on

சுதரிசனன்அன்னையின் அருள் (அல்லது) சுதரிசனன் போன்ற நல்லவர்களின் உறவு, எந்தக் காலத்திலும் நம்மைக் கைவிடாது; சந்தேகமேயில்லை.நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்கநல்லார் சொல் கேட்பதும் நன்றே – நல்லார்குணங்கள் உரைப்பதும் நன்றே அவரோடுஇணங்கி இருப்பதும் நன்றே- எனும் ஔவையார் வாக்கு பொய்யா என்ன? ஔவையாரின் இந்த நான்கு வரிகளுக்கும் அப்படியே ஒரு கதாபாத்திரம் வேதவியாசர் அருளிய தேவிபாகவதத்தில் இடம் பெற்றுள்ளது. அபூர்வமான அத்தகவல்…சூரிய குலத்தில் தோன்றிய துருவசிந்து என்ற மன்னர், அயோத்தியை அரசாண்ட நேரம் அது. மன்னருக்குப் பட்டத்தரசியாக மனோரமையும்; அவளுக்கு சககளத்தியாக (சக்களத்தி) காமக்கிழத்தியாக லீலாவதி என்பவளும் இருந்தார் கள். பட்டத்தரசிக்கு ‘சுதரிசனன்’ என்ற குழந்தையும்; சககளத்திக்கு ‘சத்ருஜித்’ என்ற குழந்தையும் இருந்தார்கள்.ஒருசமயம் மன்னர் வேட்டையாடப் போனபோது, அங்கு ஒரு சிங்கத்தால் கொல்லப்பட்டார். பிறகென்ன? பட்டத்தரசியின் உறவினர்களும் சககளத்தியின் உறவினர்களும், தங்கள் தங்கள் பரம்பரைக்கே அரச உரிமை எனப் போரில் ஈடுபட்டார்கள். போரில் பட்டத்தரசியின் உறவினர்கள் கொல்லப்பட்டார்கள். ஆதரவு இல்லாத பட்டத்தரசி மனோரமை, விபரீதத்தை உணர்ந்து, ‘‘இவர்கள் நம் குழந்தையையும் கொன்று விடுவார்கள்’’ என்ற பயத்தில் தன்குழந்தை சுதரிசனனைக் கைகளில் தூக்கிக்கொண்டு, விதல்லன் என்ற பேடியையும் தாதிப்பெண் ஒருத்தியையும் துணைக்கு அழைத்துக்கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறினாள். அனாதையைப் போல வெளியேறிய அரசி, கங்கையைக் கடந்து பரத்வாஜமுனிவரின் ஆசிரமத்தை அடைந்து, அவர் திருவடிகளில் விழுந்து அழுதாள். பரத்வாஜருக்கு ஒன்றும் புரியவில்லை; ‘‘பெண்ணே! யார் நீ?’’ எனக் கேட்டார்.முனிவர் கேட்ட கேள்விக்கு, விதல்லன் பதில் சொல்லத் தொடங்கினான்; ‘‘முனிவர் பெருமானே! இவர் அயோத்தி நகரின் பட்டத்தரசி. வேட்டைக்குப் போன மன்னர் சிங்கத்தால் கொல்லப்பட்டார். ராஜ்ய ஆசை கொண்ட சக களத்தியின் உறவினர்கள், இந்த அரசியின் உறவினர்களை முற்றுமாக அழித்துவிட்டார்கள். தனக்கும் தன் குழந்தைக்கும் ஆதரவுதேடி, அநாதையைப்போலப் பட்டத்தரசி உங்களைச் சரணடைந்து இருக்கிறார்’’ எனச் சுருக்கமாகச் சொன்னான்.முனிவர் ஆறுதல் சொன்னார்; ‘‘பெண்ணே! பயப்படாதே! இந்த ஆசிரமத்தில் நீ பயமின்றித் தைரியமாக இருக்கலாம். உன் பிள்ளையைப் பத்திரமாகக் காப்பாற்றி வா! அவன் அரசனாகி விடுவான். அதுவரை இங்கே உனக்குப் பயமோ துக்கமோ ஒருபோதும் உண்டாகாது. பகைவரிடமிருந்து பயம் வேண்டாம் உனக்கு!’’ என்றார்.உத்தமமான முனிவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட மனோரமை, நிம்மதி அடைந்தாள்; தனக்காக முனிவர் அளித்த குடிசையில் கவலையின்றி வசிக்கத் தொடங்கினாள்.விவரம் அறிந்த பகைவர்கள், ‘‘அந்தக் குழந்தை சுதரிசனன் உயிரோடு இருந்தால், எதிர்காலத்தில் அவன் அரசாட்சிக்கு வந்தாலும் வரலாம். ஆகவே, அவனை உயிரோடு விடக்கூடாது; கொன்று விட வேண்டும்” என்ற எண்ணத்தில் பரத்வாஜரின் ஆசிரமத்திற்கு வந்தார்கள். அவர்களை எச்சரித்து அனுப்பினார், முனிவர்.‘‘சரிதான். முனிவர் ஆசிரமத்தில் வளரும் சிறுபயல் சுதரிசனன் எப்படி அரசராக முடியும்? இவனால் தொல்லை வராது. இதற்காகப்போய் முனிவரிடம் மோதி, அவர் சாபத்தைப் பெறுவதைவிட, பேசாமல் போய் விடலாம்’’ என்ற எண்ணத்தில் பகைவர்கள் திரும்பினார்கள்.முனிவரின் நேரடி மேற்பார்வையில் சுதரிசனனை மிகவும் பொறுப்போடு, கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தாள் மனோரமை. சுதரிசனனும் அங்கிருந்த முனி குமாரர்களுடன் விளையாடியபடி, பயமில்லாமல் வளர்ந்து வந்தான்.சுதரிசனனுக்கு ஐந்து வயதானபோது ஒருநாள் சுதரிசனன் மற்ற முனிகுமாரர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கமாக ‘க்லீபன்’ சென்றான். அவனைப் பார்த்த முனி குமாரர்களில் ஒருவன், ‘‘க்லீபா… க்லீபா’’ என அழைத்தான்.அவன் சொன்ன விதமும் அந்தச் சொல்லும் சுதரிசனனுக்குப் புதுமையாக இருந்தன; மிகவும் ஆர்வத்தோடு அவனும் அச்சொல்லைச் சற்று மாற்றிச்சொல்ல ஆரம்பித்தான்; க்லீபன் என்பதை ‘க்லீம்’ என உச்சரிக்கத் தொடங்கினான்.‘க்லீம்’ என்பது ‘காமராஜ பீஜாட்சர’ மந்திரம். அதாவது நம் காமங்களை விருப்பங்களை நிறைவேற்றி வைப்பதில், முதன்மையான மந்திரம். காமராஜம் எனப்படும் அந்த பீஜாட்சரத்தை, மிகுந்த ஆர்வமுடன் மனதில் நிலை நிறுத்தி, ஜபம் செய்யத் தொடங்கினான், சுதரிசனன்.சுதரிசனன் செய்த பூர்வ புண்ணியத்தால் கிடைத்த அந்த மந்திரத்தை, தன்னை அறியாமலேயே சொல்லி வந்தான் சுதரிசனன்; சொல்லி வந்தான் என்றால் ஏதோ காலம் நேரம் என்று முறைவைத்துக் கொண்டு சொல்லி வந்தான் என்பதல்ல; ‘நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை’ என அபிராமிபட்டர் அபிராமி அந்தாதியில் சொல்லியபடி; நடக்கும்போதும், விளையாடும்போதும், உண்ணும்போதும் என்பது மட்டுமல்லாமல், உறங்கும்போது கூட சுதரிசனனின் மனம் அந்த மந்திரத்தைச் சொல்லி வந்தது.என்ன உறுதி! என்ன உறுதி! ஐந்து வயதில் ஆரம்பித்த மந்திர ஜபம், அது பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தது. சுதரிசனனுக்குப் பதினோரு வயதானது.அவனுக்கு அரச முறைப்படி உபநயனம் பூணூல் கல்யாணம் செய்து வைத்தார் பரத்வாஜ முனிவர்; அரசனின் மகனல்லவா? கூடவே வில் வித்தை, குதிரையேற்றம், வாள் பயிற்சி, நீதி சாஸ்திரம் என அரசர்களுக்கு உண்டான அனைத்து விதமான வித்தைகளையும் சுதரிசனனுக்குச் சொல்லிக் கொடுத்தார் பரத்வாஜர். சுதரிசனனும் முனிவர் சொல்லிக் கொடுத்தவற்றையெல்லாம் பொறுப்போடு கற்றுக் கொண்டான். மந்திரபலத்தால் அவனுக்குச் சகல வித்தைகளும் அதிவிரைவாகக் கைகூடின.அது மட்டுமல்ல; செம்பஞ்சுக் குழம்பு தீட்டிய சிவந்த திருவடிகள், சிவந்த பட்டாடை, இடுப்பில் செம்பொன்னால் ஆன ஒட்டியாணம், சிவந்த ரவிக்கை, உள்ளங்கையில் சிவ ந்த ரேகைகளுடன் கூடிய சிவந்த திருக்கரங்கள், சிவந்த திருக்கழுத்து, சிவந்த திருமுகம், சற்றே செவ்வரி ஓடிய சிவந்த திருக்கண்கள், சிவந்த நெற்றி, அதில் சிவப்பு நிறத்திலகம், திருமுடியில் செம்பொன்னாலான மணிமகுடம் – என்று அனைத்தும் சிவந்த நிறம் கொண்ட வடிவில் அம்பிகை, அவ்வப்போது நேரிடையாகவே சுதரிசனனுக்குத் தரிசனம் தந்து வந்தார்.யாராலும் தீர்க்க முடியாத பிரச்னையில் இருந்து மீள வேண்டுமானால், அம்பிகையைப் பாதாதி கேசமாகச் சிவந்த நிறத்தில், இங்கே தேவீ பாகவதத்தில் வியாசர் சொன்னதைப்போலத் தியானம் செய்தால், தீராத அப்பிரச்னைகள் தீரும்.இதில் சந்தேகமே இல்லை. அம்பிகையைப்பற்றிச் சொல்லும் சாக்த – மந்திர- தந்திர நூல்களிலும் சொல்லப்பட்டுள்ள இத்தகவல்கள், நம் காலத்திலேயே அபிராமி பட்டருக்குப் பலித்தது, தெரிந்த உண்மைதானே!அமாவாசையன்று நிலா உதிக்கும் என்று சொன்ன அபிராமி பட்டர் ‘அபிராமி அந்தாதி’ பாடி நிலவை வரவழைத்த வரலாறு மிகவும் பிரபலமானது. அபிராமி அந்தாதியில் முதல் பாடல்…உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்குமத் தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையேஇப்பாடலில் அனைத்துமே சிவப்பு வண்ணத்தில் அமைந்துள்ளது. இவ்வாறு பாடித் துவக்கிய அபிராமிபட்டர், அமாவாசையன்று நிலாவை வரவழைத்தது, வியாசர் முதலான மகான்களின் வாக்கை அழுத்தமாக நிரூபிக்கும்.சுதரிசனனிடம் திரும்புவோம் !சிவந்த திருவடிவில் அம்பிகையை அடிக்கடித் தரிசித்து வந்த சுதரிசனன், அதற்காகத் தன் நற்செயல்கள் எதையும் நிறுத்தவில்லை; தன்னை அன்போடு வளர்க்கும் முனிவரான பரத்வாஜருக்கும் தாய்க்கும் உண்டான பணிவிடைகள் அனைத்தையும் செய்து வந்தான் சுதரிசனன்.ஒருநாள் தாய்க்கு உண்டான பணிவிடைகளைச் செய்து, அவரை வணங்கி விட்டுத் திரும்பினான் சுதரிசனன். அப்போது அம்பிகை அவனுக்குக் காட்சி தந்து ஒரு வில், அம்புகள், அம்பறாத்தூணி (அம்புகள் வைக்கும் கூடு), கவசம் ஆகியவற்றைத் தந்து மறைந்தார்.அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த காசி மன்னரின் தூதர்கள், சுதரிசனனைக் கண்டார்கள்; சுதரிசனனின் பேரழகும் கம்பீரமான நடவடிக்கைகளும் தூதர்கள் மனதைக் கவர்ந்தன. உடனே அரண்மனை திரும்பிய அத்தூதர்கள், மன்னர் மகளான சசிகலையிடம் சுதரிசனனைப் பற்றி விரிவாகவே சொன்னார்கள். அவர்கள் சொல்லச் சொல்ல அரசகுமாரியின் மனம் அவளை அறியாமலேயே, சுதரிசனனை நினைக்கத் தொடங்கியது. அதை நிலைநிறுத்துவது போல, அம்பிகையும் அருள் புரிந்தார்.ஒருநாள்… சசிகலையின் கனவில் காட்சியளித்த அம்பிகை, ‘‘பெண்ணே! நீ கேள்விப்பட்ட சுதரிசனன் எனும் அந்த ராஜகுமாரன், என் பக்தன். அவனைக் கணவனாக நீ ஏற்றுக் கொள்! உன் விருப்பம் எல்லாம் நிறைவேறும்’’ எனச் சொல்லி மறைந்தார். கனவு கலைந்த சசிகலை மகிழ்ந்தாள்; அம்பிகையே வந்து கனவில் அருள் புரிந்ததை எண்ணிப் பெருமிதத்தில் அவள் முகம் அப்படியே பூரிப்பை வெளிப்படுத்தியது.அதேநேரத்தில் அங்கு வந்த வேதியர் ஒருவர், ‘‘அம்மா! நான் பரத்வாஜ ஆசிரமத்தின் பக்கமாக வரும்போது, அங்கே ஒரு மகாபுருஷனைக் கண்டேன்.அவன் அயோத்திமன்னன் துருவசிந்துவின் மகன்; சுதரிசனன் என்பது அவன் பெயர்; ஆணழகன்; நற்குணங்களின் இருப்பிடம்;கம்பீரமும் வீரமும் உடையவன். பெண்களில் எப்படித் தலைசிறந்தவளாக நீ இருக்கிறாயோ, அதேபோல ஆண்களில் தலைசிறந்தவன் அவன். உனக்குத் தகுதியான கணவன் அவன்தான். அவனை நீ மணந்தால், தங்கமும் மாணிக்கமும் ஒன்று சேர்ந்ததுபோல ஆகும்’’ என்று சொல்லிப் போய்விட்டார்.விவரம் அறியாத அரசர், தன் மகள் சசிகலைக்கான திருமண ஏற்பாடுகளில் இறங்கினார். சசிகலையோ தன் தோழியை அழைத்து, ‘‘நீ போய் என் தாயிடம் சொல்! துருவ சந்தியின் குமாரனான சுதரிசனனைத் தவிர, வேறு யாரையும் நான் கணவனாக ஏற்க மாட்டேன். சுதரிசனனை எனக்குக் கணவனாக அம்பிகையே நியமித்தது இருக்கிறாள் எனச் சொல்!’’ என்று கூறித் தோழியைத் தன் தாயிடம் அனுப்பினாள் சசிகலை.மகள் சொல்லி அனுப்பிய தகவல்களின் ஆழத்தை உணர்ந்த அரசி,தன் கணவரிடம் கலந்து ஆலோசித்து, அறிவுரை சொல்வதற்காக மகளைத் தேடிப் போனாள்.போன தாய் பக்குவமாகப் பேசத் தொடங்கினாள்; ‘‘அம்மா! நீ விரும்பும் அந்தச் சுதரிசனன் மிகவும் துர்பாக்கியசாலி; அரசிழந்தவன்; ஆதரவில்லாத அனாதை; படைகளோ – செல்வமோ அவனிடம் கிடையாது; உறவினர்கள்கூட அவனை உதறித் தள்ளி விட்டார்கள்; தாயோடு காட்டிற்கு வந்தவன், ஏதோ காய்-கனி, கிழங்குகளை உண்டு காலம் தள்ளுகிறான்; காட்டில் வசிக்கும் அவன், உனக்குத் தகுந்த கணவன் அல்ல. அவனுடைய பகைவர்களும் எந்தநேரமும் அவனைக் கொல்லச் சமயம் பார்த்து இருக்கிறார்கள். சொல்வதைக் கேள்! அவன் உனக்கு வேண்டாம்’’ என்றாள்.தாயின் வார்த்தைகள் எதுவும் சசிகலையின் மனதில், ஒரு சிறு சலனத்தைக்கூட ஏற்படுத்தவில்லை; ‘‘தாயே! தாங்கள் கூறிய எதுவும் என் மனதில் பதியவில்லை. காரணம்… சுதரிசனனை எனக்குக் கணவனாகத் தீர்மானித்தவள் அம்பிகை; அந்த அம்பிகை சொன்ன சுதரிசனனைத் தவிர, வேறு யாரையும் கணவனாக ஏற்க மாட்டேன் நான்’’ என்றாள் சசிகலை.மகள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மனம் வருந்திய அரசி, அங்கிருந்து அகன்றாள். சுயம்வரத்திற்கான ஏற்பாடுகளில் முன்னிலும் தீவிரமாக இறங்கினார், அரசர். அதற்காக சசிகலை சும்மாயில்லை; பல இடங்களுக்கும் சென்று வரக்கூடிய முனிவர் ஒருவரை அழைத்தாள்; முனிவர் பெருமானே! நீங்கள் உடனே, பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்திற்குச் செல்லுங்கள்! அங்கு சுதரிசனன் என்பவர் இருப்பார். அவரிடம் நான் சொல்வதை அப்படியே சொல்லுங்கள்!‘‘என் தந்தை எனக்காக சுயம்வரம் ஏற்பாடு செய்திருக்கிறார். மன்னர்கள் பலரும் படைகளுடன் வந்து பங்கு பெறுவார்கள். ஆனால், அம்பிகை கனவில் வந்து சொன்னபடி, உங்களைக் கணவராக நான் வரித்து விட்டேன். உங்களைத்தவிர வேறு யாரையும் மனதால் கூட நினைக்க மாட்டேன்.’’‘‘அம்பிகையின் திருவருளால், நம் இருவருக்கும் நன்மையே உண்டாகும். தெய்வத்தைத் துணையாகக் கொண்டு நீங்கள் இங்கு வர வேண்டும்.’’‘‘சுவாமி! நான் சொன்ன இந்தத் தகவல்களை சுதரிசனனிடம் போய்ச் சொல்லுங்கள்! இந்தாருங்கள்! இதைத் தட்சிணையாக வைத்துக் கொள்ளுங்கள்!’’ எனச் சொல்லி, நிறைய பொன்னை தட்சிணையாகத் தந்து முனிவரை, பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்திற்கு அனுப்பினாள் சசிகலை.சசிகலையின் வேண்டுகோளுக்கு இரங்கிய முனிவரும் பரத்வாஜ ஆசிரமத்திற்குப் போய்,சசிகலை சொன்ன தகவல்களையெல்லாம் சுதரிசனனிடம் தெரிவித்தார்; திரும்பி வந்து, சசிகலையிடமும் விவரம் சொல்லி விடைபெற்றார்.சசிகலை சொல்லி அனுப்பிய தகவல்களைக் கேட்ட சுதரிசனன், அவள் சொன்னபடியே சுயம்வரத்தில் பங்குபெறத் தீர்மானித்தான்.ஆனால், அவன் தாயான மனோரமை தடுத்தாள்; ‘‘சுதரிசனா! மகனே! நீ எங்கு போக நினைக்கிறாய் தெரியுமா? அங்கே சுயம்வரத்தில் மன்னர்கள் பலரும் வருவார்கள் . என் தந்தையைக் கொன்ற பகைவனும் படைகளோடு வருவான்; தனியாகச் செல்லும் உன்னை,அவன் அங்கு கொன்று விடுவான்’’ என்று கண்ணீர் சிந்தித் தடுத்தாள். தாயல்லவா? பெற்ற பாசம் அவளை அவ்வாறு பேச வைத்தது.தாயின் குமுறல் கேட்ட சுதரிசனன் தாயை வணங்கி, ‘‘அம்மா! அம்பிகையின் உத்தரவுப்படி தான், நான் சுயம்வரத்தில் கலந்து கொள்ளப் போகிறேன். சத்திரியப் பெண்ணான நீங்கள்போய், அஞ்சலாமா?’’ எனக் கேட்டான்.தாயால் பதில் சொல்ல முடியவில்லை;மகனுக்கு ஆசி கூறினாள்; கூடவே அம்பிகையின் அருள்வேண்டி’அம்பிகை கவசம்’ பாடி, அம்பிகையைத் துதித்தாள்.(அபூர்வமான ‘அம்பிகை கவசம்’ மூலநூலான தேவி பாகவதத்தில் இங்கே இடம் பெற்றுள்ளது)அதன்பின் தாயும் மகனுமாக, பரத்வாஜர் முதலான முனிவர்களை வணங்கி ஆசி பெற்றுப் புறப்பட்டார்கள். சுயம் வரத்திற்காக வந்த அவர்களை, காசி மன்னர் முறைப்படி வரவேற்று – உபசரித்துத் தங்க வைத்தார்.அதே சமயம் சுதரிசனனின் பகைவர்களும் ஏராளமான படைகளுடன், அந்த சுயம்வரத்திற்கு வந்தார்கள்; வந்தவர்கள், சுதரிசனனையும் மனோரமையையும் கண்டவுடன் உண்மையை அறிந்து கொண்டார்கள். அவர்கள் உணர்ந்து என்ன பயன்? அவர்களின் நோக்கத்தை அறிந்த காசி மன்னர்,தன் மகள் சசிகலையின் விருப்பப்படி, இரவோடு இரவாக அவளுக்கும் சுதரிசனனுக்கும் திருமணத்தை நடத்தி முடித்து விட்டார்.மற்ற மன்னர்கள் யாருக்கும் இது தெரியாது. மறுநாள் பொழுது விடிந்ததும் விவரமறிந்த பகை மன்னர்கள் கொதித் தெழுந்தார்கள்.‘‘ஆ… ஆ… இவனைச் சிறுபிள்ளை, அனாதைப்பயல் என்று எண்ணி ஏமார்ந்து விட்டோம். முனிவர் ஆசிரமத்தில் வளரும் இவனுக்குத் தர்பைப் புல்லும் வேத மந்திரங்களும்தான் கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால் பரத்வாஜ முனிவரோ, இவனுக்குப் போர்க்கலைகள் அனைத்தையும் சொல்லிக் கொடுத்து வளர்த்திருப்பார் போலிருக்கிறதே!‘‘ஊஹும்!இனிமேல் இவனை விட்டு வைக்கக்கூடாது.வருவது வரட்டும்; இந்தச் சுதரிசனனையும் இவன் தாய் மனோரமையையும் ஒழித்து விட்டுத்தான் மறுவேலை!’’ என்று கத்திப் போருக்கான நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.அவர்களிடம் நட்பு பாராட்டிய மன்னர்கள் பலரும் அவர்களுடன் சேர்ந்து, சுதரிசனனைக் கொல்ல முயன்றார்கள். பகைவர் படைகள் தயாராயின. சுதரிசனன், தான் எப்போதும் உருவேற்றி வரும் ‘காமராஜ’ பீஜாட்சரத்தை உருவேற்றியபடி, தன் மனைவியுடன் அங்கிருந்து புறப்பட்டான். மாமனார் காசி மன்னரும் பெரும் படைகளுடன், சுதரிசனனுக்குத் துணையாகப் புறப்பட்டார்.புறப்பட்ட அவர்களை வழிமறித்துப் போர் தொடுத்த னர் பகைவர். ஔியின் முன்னால் இருள் நிற்க முடியுமா என்ன? அம்பிகையின் அருளை முழுமையாகப் பெற்ற சுதரிசனன், அம்பிகை அருளால் பகைவர்களை வென்றான்; அனைவரையும் கொன்றான்.தாய் மனோரமையும் காசி மன்னரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.சுதரிசனன் தன் மனைவியுடன், உறவினர் சூழ்ந்துவர பரத்வாஜமுனிவரின் ஆசிரமத்தை அடைந்து,அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினான்.புதுமணத் தம்பதிகளை பரத்வாஜரும் மற்ற முனிவர்களும் ஆசி கூறி வாழ்த்தினார்கள்.அதேவேளையில் அயோத்தியில் இருந்து அமைச்சர் தலைமையில் அனைவரும்கூடி, ஆசிரமத்திற்கு வந்தார் கள்; பரத்வாஜ முனிவரை வணங்கி, ‘‘மாமுனிவரே! அயோத்தியில் இருந்து இவ்வளவு காலமாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த அத்தீயவர்கள், தங்களால் வளர்க்கப்பட்ட சுதரிசனனால் கொல்லப்பட்டார்கள். இனி அயோத்தியின் அரசாட்சிப் பொறுப்பை, சுதரிசனன் ஏற்க வேண்டும். அவரை தாய் மனோரமையுடன் அனுப்பி வைத்து அருள வேண்டும்’’ என வேண்டினார்கள்.முனிவர் மனோரமையை அழைத்து, ‘‘அம்மா! அன்று நீ கைக்குழந்தையுடன் இங்கு அடைக்கலமாக வந்தபோது, சொன்னேனே… நினைவிருக்கிறதா! பொறுப்பாக வளர்த்து வா உன் பிள்ளையை; அவன் அரசனாக ஆவான்- என்று சொன்னேனே! நடந்திருக்கிறது பார்! அனைத்தும் அம்பிகையின் அருள்’’ என்றார்.சுதரிசனன் மனைவியுடன் வந்து முனிவரை வணங்கினான்; ‘‘முனிவர் பெருமானே! தங்கள் அருளாசியாலும் மந்திர உபதேசங்களாலும் வளர்ப்பாலும் தான், அம்பிகையைத் தரிசித்தேன்; அவள் அருளை அடைந்தேன்’’ என்று கூறி, மறுபடியும் முனிவரை வணங்கினான்.ஆசி கூறிய முனிவர்,‘‘அயோத்தி செல்! நல்ல முறையில் ஆட்சி செய்!’’ என்று கூறி வழியனுப்பி வைத்தார். அதை ஏற்ற சுதரிசனன் அயோத்தி திரும்பி, அரசை ஏற்று நன்முறையில் ஆட்சி செலுத்தினான்.திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை என்பதற்கு இணங்க, ஆதரவின்றி வந்த அரசிக்கும் அவள் குழந்தைக்கும் ஆதரவு தந்த பரத்வாஜர்; அவர் சொன்ன வழியிலேயே நடந்து அம்பிகையை நேருக்கு நேராகத் தரிசித்து அருள்பெற்ற சுதரிசனன்; அவனுக்கு ‘அம்பிகை கவசம்’ சொல்லி மகனுக்கு ஆசி கூறிய மனோரமை எனப் பலவிதங்களிலும் சொல்லி வழி காட்டுகிறார் வியாசர்.(தொடரும்)பி .என்.பரசுராமன் …

You may also like

Leave a Comment

twenty − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi