சுசீந்திரம் கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

 

நாகர்கோவில், ஜன.26: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் நேற்று நிறைபுத்தரிசி பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் நிறைபுத்தரிசி பூஜை நேற்று அதிகாலை நடைபெற்றது. இதற்காக அதிகாலையில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான வயல்களில் இருந்து நெற்கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு கட்டுக்கட்டுகளாக கட்டப்பட்டு தாணுமாலயன் சுவாமி கோயிலுக்கு மேள தாளங்கள் முழங்க கொண்டுவரப்பட்டது.

பின்னர் ரதவீதியை சுற்றி வந்து கோயிலின் உள்ளே எடுத்து வரப்பட்டது. நெற்கதிர்கள் தாணுமாலயன் சுவாமிக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. கோயில் உட்பிரகாரங்களில் உள்ள தெய்வங்களுக்கும் நெற்கதிர்கள் படைக்கப்பட்டது. அதன் பிறகு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 8 மணியளவில் சிதம்பரேஸ்வரர்-அம்பாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ரதவீதியை சுற்றிவரும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் ஏராளமானோர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர்கள் வழங்கப்பட்டன. அவற்றை அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் வழங்கினார். இந்த நெற்கதிர்களை பக்தர்கள் தங்களது வீடுகளில் உள்ள பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் நெற்கதிர்களை வீட்டின் முன்பு தொங்கவிடுவார்கள். இதன்மூலம் வீட்டில் செல்வம், மகிழ்ச்சி நிலைக்கும் என்பது ஐதீகம். அதேபோல் வயல்கள் வைத்திருப்பவர்கள் இந்த நெல்மணிகளை வயல்களில் தூவினால் அந்த போகம் முழுவதும் செழித்து லாபம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதற்கிடையே மாலை 6.30 மணிக்கு சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ரதவீதியை வலம்வரும் நிகழ்ச்சி நடந்தது.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்